சாரா உயிருடன் இருந்தால் நிச்சயம் பிடிக்கப்படுவார்!

21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடரும். சாரா என்பவர் கைது செய்யப்படவேண்டியவர்களின் பட்டியலில் இருக்கிறார். உயிருடன் இருக்கும் பட்சத்தில் அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன. 8 சம்பவங்கள் பதிவாகின. அவை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஆவணங்கள் இரு மாதங்களுக்கு முன்னர் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டன. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வரும்வரை சட்டமா அதிபர் காத்திருந்தார். தற்போது அந்த அறிக்கையும் கிடைத்துள்ளது.

எம்மால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஒப்பிட்டுதான் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்வார். எடுத்த எடுப்பிலேயே வழக்கு தாக்கல் செய்துவிடவும் முடியாது. எனவே, சட்டத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க முடியாத வகையில் சாட்சியங்கள் முன்வைக்கப்படவேண்டும். அதற்காகவே காலம் எடுத்திருக்க கூடும். இது பற்றி சட்டமா அதிபர் விளக்கமளித்தார்.

21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெறவில்லை. அது தொடரும். 31 பிரதான சந்தேக நபர்களுக்கு வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, சாரா என்பவர் கைது செய்யப்படவேண்டியவர்களின் பட்டியலில் உள்ளார். அவர் உயிரிழந்திருந்தால் கைதுசெய்ய முடியாது. உயிருடன் இருந்தால் கைது செய்யப்படுவார். டி.என்.ஏ, பரிசோதனைகள் தற்போது இடம்பெறுகின்றன.” – என்றார்.

Paid Ad