ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 185 ஓட்டங்களைக் குவித்தது.
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 50வது ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சாயீத் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப் சிங் இருவரும் களமிறங்கினர்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே மந்தீப் சிங் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து கே.எல்.ராகுலுடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். ஒரு புறம் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். மறுமுனையில் அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல் ராஜஸ்தான் பவுலர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார்.
பென் ஸ்டோக்ஸ் வீசிய 15ஆவது ஓவரில் கே.எல்.ராகுல்(46 ரன்கள் 41 பந்துகள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன்(22 ரன்கள், 10 பந்துகள்) 3 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். பென் ஸ்டோக்ஸ் வீசிய 19வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல் 1 ஓட்டத்தில ; தனது சதத்தை தவறவிட்டார். ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரின் 4வது பந்தில் கிறிஸ் கெய்ல்(99 ரன்கள், 63 பந்துகள்) பவுல்ட் ஆனார்.