ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெய்வர்தா தயாரிக்கும் இப்படத்தை ஹெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்துள்ளார். இதில் அப்பாஸ், கவுரி பிரியா, ஜார்ஜ் மரியம், ப்ரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் விஜய் சேதுபதி, கவின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விஜய் சேதுபதி பேசும்போது, “சினிமா அற்புதமான தொழில். பியாண்ட் பிக்சர்ஸ் போன்ற இளம் தயாரிப்பாளர்கள் இத்துறைக்கு வந்ததை வரவேற்கிறேன். யார் என்ன சொன்னாலும் பயப்பட வேண்டாம். இது அட்வைஸ் அல்ல, என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.
ஓர் இயக்குநர் எப்படி படித்து வளர்கிறாரோ, ஒரு நடிகர் எப்படி கற்றுக்கொள்கிறாரோ, அதேபோல் தயாரிப்பாளரும் வியாபாரம் மற்றும் ஸ்கிரிப்ட் ஆகியவற்றை கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் எப்போதும் பள்ளி மாணவன் போலவே நடிக்க முடியும் போல இருக்கிறது. எந்த காலகட்டத்திலும் அவர் அதே இளமையோடு தோன்றுகிறார்” என்றார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் கூறும்போது, “ஆரம்பத்தில், புது தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதில் தயக்கம் காட்டினேன். ஆனால், பியாண்ட் பிக்சர்ஸ் திட்டமிட்ட காலத்துக்கு முன்பே படத்தை முடித்து வியாபாரமும் செய்துவிட்டனர். இந்தப் படம் யாரையும் ஏமாற்றாது. என்னையே பல இடங்களில் அழ வைத்தது. உங்கள் தந்தையை அல்லது நீங்கள் ஓர் தந்தையாக இருந்தால் உங்களை இப்படம் கொண்டாட வைக்கும்” என்றார்.










