சிறிகொத்தவை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்டது சஜித் அணி

” அரசியல் சமரில் ஈடுபட்டு சிறிகொத்தவை கைப்பற்றுவதற்கு நாம் தயாரில்லை. எனவே, தலைமைப்பதவியை ஏற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாவுக்கு அழைப்பு விடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அக்கட்சி உறுப்பினர்களுக்கு அரசியல் எதிர்காலம் என்பது இருக்காது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகலை மாவட்ட வெற்றி வேட்பாளர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (17) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களும், வாக்கு வங்கியும் ஐக்கிய மக்கள் சக்தி வசமே இருக்கின்றது. பொதுத்தேர்தலில் இதனை நாம் உறுதிப்படுத்தினோம். எனவே, ரணில் அணியினர் இனியாவது உறுதியானதொரு தீர்மானத்தை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ரணிலுடன் இருக்கும் உறுப்பினர்களுக்கு மாகாணசபைத் தேர்தலில்கூட வெற்றிபெறமுடியாத நிலை ஏற்படும்.
முடியுமானால் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று காட்டுமாறு ரங்கே பண்டார, அகிலவிராஜ், வஜிர உள்ளிட்டோருக்கு சவால் விடுக்கின்றோம். முடியாது. இனி அவர்களுக்கு பிரதேச சபைத் தேர்தலில்கூட வெற்றிபெறமுடியாது.
ஆகவே, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை ஏற்குமாறு சஜித்துக்கு ரணில் அணியினர்தான் வலிந்து அழைப்பு விடுக்கவேண்டும். அவ்வாறு விடுக்கப்படும் அழைப்பில்தான் அவர்களின் அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது. நாம் வலிந்துசென்று பதவியை கேட்கப்போவதில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியாக முன்நோக்கி பயணிப்போம். ஐ.தே.கவின் தலைமைப்பதவி வழங்கப்படுமானால் அதனை சஜித் ஏற்று கூட்டாக பயணிக்ககூடியதாக இருக்கும்.
2024 முற்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து எமது அரசியல் நகர்வுகள் இடம்பெறும். இன்னும் இரண்டு மாதங்களில் சஜித்தின் நேரடி பங்களிப்புடன் கீழ்மட்ட அரசியல் இயந்திரம் கட்டியெழுப்படும். ” – என்றார்.

Related Articles

Latest Articles