-நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் குழந்தைவேல் ரவி
அரசாங்க நிறுவனங்களில் சிறுவர் அபிவிருத்திப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கென உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சிறுவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் செயற்பட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் கே. குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் உட்பட அனைத்து திணைக்களங்களிலும் சிறுவர் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சிறுவர் பாதுக்காப்புக்கென அமைச்சும் நிறுவப்பட்டுள்ளது.
தோட்டங்களிலும் சிறுவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. எனினும், அசம்பாவிதங்கள் நேர்வதற்கு முன்னர் சிறுவர்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் உள்ளதையே காணக் கூடிதாக இருக்கின்றது.
எனவே, முதற் கட்டமாக அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்கள், பிரதேச சபைகள், செயலகங்கள் மற்றும் தோட்டங்களில் உள்ள சிறுவர் பிரிவுகளுக்கு பொறுப்பானவர்களையும் கிராம உத்தியோகத்தர்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடி சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க நோர்வூட் பிரதேச சபையின் ஊடாக ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இது சம்பந்தமாக அடுத்த வாரம் நுவரெலியாவில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் பிரேரணை ஒன்றை முன்வைக்க உள்ளேன்.
அண்மையில் டயகம தோட்டத்தைச் சேர்ந்த ஹிஷாலினி குறைந்த வயதில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மலையகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முழு நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தச் சம்பவம் காலப் போக்கில் மறக்கப்பட்டு விடுவது இயல்பான ஒன்றாகும்.
எனினும், இத்தகைய அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் ஏற்பாடாமல் இருக்க சிறுவர் தொடர்பான பதிவுகள் மற்றும் இளைஞர்களில் வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்லும் விபரங்களைத் திரட்டி சமூகப் பாதுகாப்பை ஏறபடுத்த வேண்டியது எமது கடமையாகும். அதற்கான முயற்சிகளை நோர்வூட் பிரதேச சபை முன்மாதிரிகையாக மேற்கொள்ளும் என்றார்.