சீன தாக்குதலில் இருந்து தாய்வானை அமெரிக்கா காக்கும்

சீனாவின் தாக்குதல் ஒன்றில் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

சி.பி.எஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றின்போது, அமெரிக்க துருப்புகள் தாய்வானை பாதுகாக்குமா? என்று கேட்கப்பட்டபோது, “ஆம், உண்மையில், அது முன்னெப்போதும் நிகழாத ஒன்றாக இருக்கும்” என்று பதிலளித்தார்.

இருப்பினும் தாய்வானுக்கான அமெரிக்கக் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் தெரிவித்தார்.

தாய்வான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இராணுவ ரீதியாக அமெரிக்கா பதிலடி கொடுக்குமா என்பதற்கு வொஷிங்டன் நீண்ட காலமாகத் தெளிவான பதிலை வெளியிட்டதில்லை.

இருப்பினும் அமெரிக்கா, தாய்வானின் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை என்று பைடன் கூறினார்.

‘ஒரே சீனா’ கொள்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து கடப்பாடு தெரிவிக்கும் என்று அவர் கூறினார்.

கிழக்கு சீன கடற்கரைக்கு அப்பால் இருக்கும் சுயாட்சி புரியும் தீவான தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. இது தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து முறுகல் நீடிக்கிறது.

தாய்வானுடன் நெருக்கமான உறவை பேணி வரும் அமெரிக்கா அந்நாட்டுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது.

Related Articles

Latest Articles