சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த தயார் – ஜனாதிபதியிடம் இலங்கை வர்த்தகச் சங்கம் உறுதி

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி, சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கை வர்த்தகச் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வர்த்தகச் சங்கத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே, இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்துக்கு தங்களால் பங்களிக்க முடியும் என அவர்கள் இதன்போது, உறுதியளித்துள்ளனர்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் மூலம் நாட்டை வேகமாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு சங்கத்தின் புதிய அதிகாரிகள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், நடைமுறையில் உள்ள சில சட்ட திட்டங்களால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற தடைகளை நீக்குவதும் இலத்திரனியல் மயமாக்கல் மூலம் முறைகேடுகள் மற்றும் ஊழல்களைத் தடுப்பதன் ஊடாக ஏற்றுமதியை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles