புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பாதாள குழு தலைவர் “கணேமுல்ல சஞ்சீவ“ சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரி உட்பட இதுவரையில் 10 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரியுடன் வந்திருந்த பெண்ணை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியைக் கோருகின்றோம். குறித்த பெண் தொடர்பில் துல்லியமான தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்.
தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மை பேணப்படும். கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு தகவல் வழங்கலாம்.” – என்றார்.










