ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப்போட்டி: மலையகம் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தி!

“இவ்வருடம் தேர்தல் ஆண்டாகும். ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவருக்கும் இடையிலேயே போட்டி நிலவும். இந்த மும்முனை போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வழங்கும் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக அமையும்.”

இவ்வாறு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்க தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இராகலை, வலப்பனை மற்றும் உடப்புஸ்ஸலாவ பிரதேச தொழிலாளர் தேசிய சங்க அங்கத்தவர்கள் உள்ளிட்ட மக்கள் சந்திப்பு இராகலை புறநெகும மண்டபத்தில் ஞாயிற்று கிழமை (24) மாலை இடம்பெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார் உட்பட தொழிலாளர் தேசிய சங்க நிதி காரியதர்சி சோ. ஸ்ரீதரன், சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் எஸ்.சிவனேசன் ஆகியோருடன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய திகாம்பரம் கூறியவை வருமாறு,

“ இந்த நாட்டில் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பொருளாதார பிரச்சினை ஏற்பட்டு அந்த நிலைமை இன்றும் தொடர்கிறது. இன்றைய அரசாங்கத்திடம் பொருளாதார மேம்பாட்டு திட்டம் இல்லை. அரசாங்கம் பெற்று கொண்ட சுமார் நூறு பில்லியன் டொலர் கடன் மீள் செலுத்த வேண்டி உள்ளது. இன்னும் இந்த கடன் செலுத்துவதற்கு ஆரம்பிக்கப்படவில்லை.

இந்த கடனை செலுத்த ஆரம்பித்தால் நாட்டில் பழையப்படி பொருளாதார பிரச்சினை ஏற்படும். பெற்றோல், டீசல் உட்பட பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நான் அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்த வீடுகள், பிள்ளை பராமரிப்பு நிலையங்கள், வீதிகள் தான் இப்போது கட்டப்படுகிறதேதவிர மலையகத்திற்கு நான் செய்த அபிவிருத்திற்கு அப்பால் எந்தவோர் அபிவிருத்தியும் இதுவரை செய்யப்படவில்லை. இது மக்களுக்கு நன்கு தெரியும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாத கடைசிக்குள் 1700 ரூபா வாங்கி தருவதாக சொல்கிறார்கள். அதேநேரத்தில் கம்பனிகாரர்கள் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக இல்லை. எனவே, சம்பள உயர்வை பெற்றுகொடுத்தால் நாம் அவர்களை வாழ்த்துவோம்.

மலையகத்தில் 200 வருடங்கள் வாழ்ந்து வருகின்ற வரலாறு இருந்தாலும் நமக்கென்று வீடுகள் கட்டி கொள்ள சொந்த காணி இல்லை. தோட்டங்களில் வீடுகட்ட இலகுவில் காணிகளை பெற்றுக்கொள்ள முடியாது.

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாகும். இதில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும். அதில் ஜனாதிபதியாக எவர் வருவாரோ அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் எங்கள் மக்களுக்கு முதலில் பத்து பேர்ச் இடத்தை கொடுக்க வேண்டும் என நான் கோரிக்கை முன் வைத்துள்ளேன்.
அடுத்த தேர்தலிலும் திகா, உதயகுமார், மனோ, வேலு குமார், இராதா ஆகியோர் வெற்றிபெறுவோம். ஏனெனில் நாங்கள் மக்களோடு இருக்கிறோம்.” – என்றார்.

ஆ.ரமேஷ்

Related Articles

Latest Articles