அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தேர்தல்கள் தொடர்பிலும் வேட்பாளர்கள் சம்பந்தமாகவும் தீர்க்கமான முடிவை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று (26) கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.
நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று கூடவுள்ளதை மொட்டு கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது உறுதிப்படுத்தினார்.
மே தினம், தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராயவே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சியின் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களமிறக்குவதா, ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேரடியாக ஆதரவு வழங்குவதா அல்லது மறைமுகமாக ஆதரவு வழங்குவதா என்பது பற்றியும் பேசப்படவுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மொட்டு கட்சி அறிவித்துவரும் நிலையில் அது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்படலாம் என தெரியவருகின்றது.
