“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனவாதி அல்லர். அவர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.” – என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,
“எனக்கு முன்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஜனாதிபதி தொடர்பில் முன்வைத்த கருத்துகள் அநீதியானவை. ஏனெனில் நாடாளுமன்ற நடவடிக்கைகளானவை ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இடம்பெறுபவை அல்ல.
சபை நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்ற நடவடிக்கைக்குழுவே தீர்மானம் எடுக்கும்.
முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்வதற்குரிய தேவைப்பாடு எனக்கும் இருக்கின்றது. தேர்தலுக்கு முன்னர் அதனை செய்ய வேண்டும் எனக்கோரி, நாடாளுமன்ற நடவடிக்கை குழுவிடம் யோசனை முன்வைத்தால், அதைவிடவும் முக்கிய விடயம் எனக் கருதி மற்றுமொரு விடயத்தை அக்குழு நிகழ்ச்சி நிரலில் இணைக்கலாம்.
இதற்காக கோபப்பட்டு அரசியல் முடிவெடுப்பதென்பது சிறுபிள்ளைத்தனமானது. இன, மத, மொழி, கட்சி வேறுபாடின்றி சுயாதீன வேட்பாளராகவே ஜனாதிபதி போட்டியிடுகின்றார். தூரநோக்கு சிந்தனை அடிப்படையிலேயே அவரின் திட்டங்கள் உள்ளன.” – என்றார்.