உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 20 அணிகளில் 17 அணிகள் மொத்தம் 16 பயிற்சிப் போட்டிகளில் இடம்பெறவுள்ளன. இதில் இலங்கை அணி இரண்டு பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ளது. இந்தப் பயிற்சிப் போட்டிகள் டெக்சாஸ், புளோரிடா மற்றும் டினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள குவின்ஸ் பார்க் ஓவல் மற்றும் பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இந்த பயிற்சிப் போட்டிகள் சர்வதேச டி20 அந்தஸ்தை பெறாது என்பதோடு ஒவ்வொரு அணியும் தமது அணியில் உள்ள 15 வீரர்களையும் போட்டியில் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
கடந்த மே 14 ஆம் திகதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற இலங்கை அணி எதிர்வரும் மே 28 ஆம் திகதி நெதர்லாந்து அணிக்கு எதிராக முதல் பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ளது. இந்தப் போட்டி புளோரிடா, கிராண்ட் பெரைரி கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து எதிர்வரும் மே 31 ஆம் திகதி இலங்கை அணி அயர்லாந்து அணியை இரண்டாவது பயிற்சிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி புளோரிடாவில் உள்ள பிரோவாட் கௌண்டி அரங்கில் நடைபெறும்.
டி20 உலகக் கிண்ணம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஜூன் 1 தொடக்கம் 29 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஆரம்ப சுற்றில் டி குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கை அணி முதல் போட்டியில் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த ஆட்டம் நியூயோர்க்கில் நடைபெறும்.