டெல்லி – செங்கோட்டை அருகே சிக்கனலில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர்.
டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்தவர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பான விசாரணையில், வெடிபொருளுடன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்தது தெரியவந்தது.
வெடித்த காரில் இருந்து சேகரிக்கப்பட்ட உடற்பாகங்கள் மற்றும் உமரின் தாயாரிடம் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியை பகுப்பாய்வு செய்ததில் அந்த இரண்டும் ஒத்துப்போவது உறுதியானது. இதனடிப்படையில் காரை மருத்துவர் உமர் ஓட்டி வந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த தாக்குதலில் அவரது பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் வெள்ளிக்கிழமை அன்று புல்வாமாவில் உள்ள மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர். இதற்கு ஐஇடி வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் தீவிர சோதனை நடத்தியதில் அங்கு ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மூவர் மருத்துவர் உமர் நபியின் உறவினர்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை மற்றும் கைது படலத்தை விசாரணை அமைப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
டெல்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்கள் உமர் நபி, முஜம்மில், ஷாகின் ஆகியோர் திட்டமிட்டு இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மூவரும் சுவிட்சர்லாந்தின் ‘திரீமா’ செயலியைப் பயன்படுத்தி சதி திட்டம் தொடர்பாக கலந்துரையாடி உள்ளனர்.










