தென்பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய தீவு நாடான டோங்கா சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளன.
எரிமலை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான தீவு நாடான டோங்காவில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு முதல் முறையாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொலைகார கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கினாலும், இன்று வரை ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத ஒரு சில நாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
அந்த வகையில் தென்பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய தீவு நாடான டோங்கா கொரோனா தொற்றில் இருந்து தப்பிய சொற்ப நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது.
எல்லைகளை மூடியது
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகளில் கொரோனா பரவ தொடங்கியதுமே டோங்கா வெளிநாடுகளுடனான எல்லைகள் அனைத்தையும் மூடியது.
இதன் மூலம் நாட்டுக்குள் கொரோனா வைரசை நுழைய விடமால் டோங்கா அரசு வெற்றிகரமாக தடுத்தது. எனினும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இருந்தபோதிலும் அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் வைரஸ் மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டது.
இதனால் அங்கு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியமும் வரவில்லை. கடந்த திங்கட்கிழமை வரை டோங்காவில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்ற நிலையே இருந்தது.
முதல் முறையாக ஊரடங்கு
இந்த நிலையில் நேற்று முன்தினம் டோங்காவில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தலைநகர் நுகு அலோபாவில் உள்ள துறைமுகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 2 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர்.
அதை தொடர்ந்து ஊழியர்களின் குடும்பத்தினர் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டில் முதல் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (நேற்று) மாலை 6 மணிக்கு ஊரடங்கு அமலுக்கு வரும் எனவும், ஒவ்வொரு 48 மணி நேரத்துக்கு பிறகும் நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் அந்த நாட்டின் பிரதமர் சியோசி சொவலேனி கூறினார்.
வைரஸ் நாட்டுக்குள் நுழைந்தது எப்படி?
1 லட்சம் மக்கள் தொகை கொண்ட டோங்காவில் கடந்த மாதம் 14 ஆம் திகதி ஒரு தீவுக்கு அருகே கடல் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. இதனால், அங்கு சுனாமி அலை உருவானது. இதில் 3 பேர் பலியாகினர்.
எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி அந்த நாட்டை முற்றிலுமாக நிலைகுலைய செய்துள்ளது. அங்கு குடிநீர் மற்றும் உணவு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அண்டை நாடுகள் டோங்காவுக்கு உதவிக்கரம் நீட்டின. அந்த நாடுகள் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை கப்பல்களில் டோங்கோவுக்கு அனுப்பி வருகின்றன.
இப்படி அண்டை நாடுகளில் வந்த நிவாரண பொருட்களை கையாண்ட துறைமுக ஊழியர்கள் இருவருக்குதான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இருப்பினும் வெளிநாட்டு கப்பல்களில் வந்த நிவாரண பொருட்கள் அல்லது ஊழியர்கள் மூலம் கொரோனா பரவியது என்பது உறுதி செய்யப்படவில்லை.