பதுளை பிரதேச செயலக பிரிவில் அனைத்து பெருந்தோட்டப்பிரிவு மக்களுக்கும் இந்திய- தமிழக நிவாரண உதவிகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ. அரவிந்தகுமார் கேட்டுள்ளார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமைக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிமொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து அக் கடிதத்தில்,
” இந்திய – தமிழகம் நிவாரண உதவியாக அரிசி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம், பதுளை மாவட்டத்தின், பிரதேச செயலகங்கள் ஊடாக, பெருந்தோட்டங்களை உள்ளடக்கிய வகையில் சமூர்த்தி நிவாரண உதவிகள் பெரும் குடும்பங்களுக்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆனால், பதுளைப் பிரதேச செயலகப் பிரிவில், குறிப்பிட்ட வேலைத்திட்டம் ஒரு சாராருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருகின்றதாக அறிய முடிகின்றது.
பெருந்தோட்டங்களைப் பொறுத்த வரையில், சமூர்த்தி நிவாரண உதவிகள் பெருந் தோட்ட மக்களுக்கு முழுமையாகப் கிடைப்பதில்லை.
பதுளை மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப்பிரிவுகளில் தமிழக நிவாரண உதவிகளின் மூலம் அரிசி பங்கீடுகள் இடம்பெறும் போது, பதுளை பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கு மட்டும் முறையாக கிடைக்காததன் காரணம் என்னவென அறியதர வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினால், பெருந்தோட்ட மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். அம்மக்கள் தத்தம் வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாத, அவலநிலையில் இருந்து வருகின்றனர். ஆகவே, இது குறித்து உரிய நடவடிக்கைகளை, உடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.










