” வடக்கு, கிழக்கில் இனப்படுகொலையே நடந்துள்ளது. 2009 இல் முள்ளிவாய்க்காலிலும் பேரவலம் அரங்கேற்றப்பட்டது. செம்மணியும் இதற்கு சாட்சியாகும். எனவே, வடக்கு மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு தெற்கு மக்களும் அணிதிரள வேண்டும்.”
இவ்வாறு அரசியல், சிவில் சமூக செயற்பாட்டாளரான அருட்தந்தை மா. சத்திவேல் அறைகூவல் விடுத்துள்ளார்.
அத்துடன், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
செம்மணி புனித புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” செம்மணியில் 15 இற்கு மேற்பட்ட மனித புதைகுழிகள் உள்ளன எனவும், 400 இற்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளை கொன்று புதைத்தோம் எனவும் குற்றச்சாட்டுக்கு இலக்கான இராணுவ கோப்ரலான சோமரத்ன ராஜபக்ச என்பவர் சாட்சியம் அளித்திருந்தார்.
இந்த சாட்சியத்துக்கமைய அப்போது அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. எனினும், நீதி வழங்கப்படவில்லை. மாறாக நீதி புதைக்கப்பட்டது. சந்திரிக்கா ஆட்சியில் இருந்த ஜே.வி.பியும் இது பற்றி வாய்திறக்கவில்லை.” – எனவும் அருட்தந்தை மா. சத்திவேல் குறிப்பிட்டார்.
செம்மணியில் இதுவரை 60 இற்கு மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பச்சிளம் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். பச்சிளம் குழந்தைகள் புலிகளா? பயங்கரவாதிகளா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்நாட்டிலுள்ள இராணுவம் வடக்கு, கிழக்கில் இனப்படுகொலையில் ஈடுபட்டது. 2009 இல் பாரிய இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நடந்தது. இது தொடர்பில் நீதியை வழங்குவதற்கு தெற்கிலுள்ள நாம் வடக்கு மக்களுடன் இணைய வேண்டும். நீதி வழங்குமாறு குரல் கொடுக்க வேண்டும்.
தெற்கிலுள்ள அரசுகள் நீதியை வழங்குமா என்பது சந்தேகமே. இதனை மூடி மறைக்ககூடும். ஏனெனில் இராணுவத்தினரை பாதுகாப்பதற்கே முற்படுவார்கள். இராணுவத்தினரை பாதுகாப்பதற்கே சந்திரிக்கா, புதைகுழியை தோண்டவில்லை. மஹிந்த, கோட்டா, ரணில் ஆகியோரும் அதே வழியில்தான் செயற்பட்டனர்.
இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை சர்வதேசம் ஏற்கவேண்டும்.” – என அருட்தந்தை சக்திவேல் மேலும் குறிப்பிட்டார்.