நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எனது நண்பர்களான சக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அபிவிருத்தி நிதி வாங்கிய தமிழ் கட்சிகள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார்களா என கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பொருளாதார ரீதியில் சரிந்து கிடந்த நாட்டை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்கிறார்.
நாடு பொருளாதார ரீதியில் சரிந்து கிடந்த போது யாரும் நாட்டை பொறுப்பேற்க முன்வராத நிலையில் தனி ஒருவராக நாட்டை பொறுப்பேற்று ஏனைய காட்சிகளுடன் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தேர்தல் அறிவிப்புக்கள் வெளியாகவே ரணில் விக்ரமசிங்காவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவோம் என கூறிவிட்டோம்.
தற்போது அனேகமான தமிழ் சிங்கள முஸ்லிம் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் எனது சக நண்பர்களான தமிழ் கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவு வழங்கும் என நம்புகிறேன்.
சகா தமிழ் கட்சிகள் மக்களுக்கான அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக பல கோடி ரூபாயகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியமை அனைவருக்கும் தெரிந்த விடயம்.
எமது அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணும் சமதளத்தில் மக்களின் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழ் கட்சிகளின் நம்பிக்கையை நான் வரவேற்கின்றேன்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் அரசியல் அபிவிருத்தி அன்றாட பிரச்சனை எமது குறிக்கோளாக அன்று தொடக்கம் இன்று வரை வலியுறுத்தி வருகின்ற ஒரே கட்சி.
அதுமட்டுமல்லாது தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு 13 வது திருத்தம் ஆரம்ப புள்ளியாக அமைய வேண்டும் என வெளிப்படையாகவே கூறிய கட்சி எமது கட்சி. துரதிஷ்டவசமாக சக தமிழ் கட்சிகள் தாயகம் தேசியம் ஒரு நாடு இரு தேசம் என்றெல்லாம் கூறி மக்களை பாரிய துன்பத்திற்கு உள்ளாக்கியது வரலாறு.
அந்த வரலாற்றைக் கடந்து தற்போது தமிழ் கட்சிகளும் நாங்கள் ஏற்கனவே வலியுறுத்திய 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைக்கிறார்கள்.
அவர்களின் கோரிக்கை காலம் கடந்த ஞானமாக இருந்தாலும் தற்போதாவது சரியான ஒரு அரசியல் பாதைக்கு வருவதை விட்டு வரவேற்கிறேன்.
அதேபோல் தமிழ் கட்சிகள் பொது வேட்பாளர் என ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
தமிழ் பொது வேட்பாளர் அரசியல்வாதிகளுக்கு நன்மை பயத்தாலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காது என்பது அதனை ஏற்படுத்தியவர்களுக்கு நன்கு தெரியும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டை வழிநடத்தக்கூடிய ஆளுமை மிக்க தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.
ஆகவே அவரது செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு சக தமிழ் கட்சிகளின் தலைவர்களும் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவினை வழங்குவர்கள் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
