தமிழ் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை

தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் தொடர்ந்தும் எமது உரிமைகளுக்காகப் போராடி வரும் இனமாகவே தமிழினம் காணப்படுகின்றது என்றும், அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாது என்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சோம பாலன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அண்மையில் யாழ்ப்பாணம் விஜயம் செய்த இலங்கைக்கான சீனத் தூதவர், தமிழ் மக்கள் தற்போதைய அரசுடன் இணைந்து மாற்றத்துக்காகப் பயணிக்கின்றனர் எனவும், இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் எனவும் தெரிவித்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் எந்தவொரு நாட்டினையும் நட்பு நாடாகவோ அல்லது எதிரி நாடாகவோ பார்ப்பது கிடையாது.

இவ்வாறான நிலையில் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் தெரிவித்த கருத்து தொடர்பில் சில விளக்கத்தைத் தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன்.

தமிழ் மக்கள் வாழ்வியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து இன அழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்கள் விவகாரம், சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

தமிழ் மக்கள் தமக்கு விளைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கிப் பயணித்தவர் நிலையில் அதற்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாது. ஏனெனில் அதையும் தாண்டி பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

தமிழ் மக்கள் தமது தேசிய விடுதலைக்காகப் போராடி வரும் ஒரு இனமாகக் காணப்படுகின்ற நிலையில் அதனை வென்றெடுப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற வகையில் எங்களால் முடிந்தவரை தொடர்ந்தும் பயணிப்போம்.” – என்றார்.

Related Articles

Latest Articles