‘தாதா சாகேப்’ தலைவா..!

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட காலம் குறித்துப் பலருக்கும் கேள்வியிருக்கலாம். சிலருக்கு அதன் நோக்கம் குறித்தும் விமர்சனம் இருக்கலாம்.

ஆனால் ‘தாதாசாகேப் பால்கே விருதுக்குத் தகுதியானவரா ரஜினி?’ என்று கேட்டால் ‘நூறு சதவிகிதம்’ என்றுதான் சொல்லமுடியும். தனது வணிக வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவை உலகச்சந்தை அளவுக்கு உயர்த்தியவர் மட்டு மல்ல, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தான் ஒரு தேர்ந்த எதார்த்தமான நடிகர் என்பதையும் நிரூபித்தவர் ரஜினி.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் முதல் காட்சியில், ஒரு பெரிய வாயிற்கதவைத் திறந்துகொண்டு என்ட்ரி கொடுப்பார் ரஜினி.

அது, தமிழ் சினிமாவுக்கு அவர் திறந்துவிட்ட வியாபாரக் கதவு. கொரானாவால் ஓராண்டு தாமதமாக இந்த விருது ரஜினிக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

ரஜினியின் வசனங்களில் சொல்வதென்றால், லேட்டா னாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறது. சரியாகத் தமிழகத் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்டதுதான் ‘சும்மா அதிருதில்ல.’

தாதா சாகேப் பால்கே விருதை சத்யஜித் ரேவும் வாங்கியிருக்கிறார்.

பாலிவுட் மசாலாப் படங்களை இயக்கிய யாஷ் சோப்ராவும் வாங்கி யிருக்கிறார். சத்யஜித் ரேவின் அற்புதமான கதாநாயகன் சௌமித்ரா சட்டர்ஜியும் வாங்கியிருக்கிறார்.

கடைசிப் படம் வரை மரங்களைச் சுற்றிவந்து ஹீரோயினுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த தேவ் ஆனந்தும் வாங்கியிருக்கிறார்.

இந்தி சினிமாவின் பயங்கர வில்லன் பிரானும் பெற்றிருக்கிறார். ‘இவரை விட்டுவிட்டு அவருக்கு ஏன் கொடுத்தார்கள்’ என்ற கேள்வி எல்லா விருதுகளையும் எல்லாத் தருணங்களிலும் சர்ச்சைகளாகச் சுற்றிக்கொண்டிருக்கும்.

ஆனால், ரஜினிக்குக் கிடைத்திருக்கும் தாதா சாகேப் பால்கே விருது, உலகத் தமிழர்கள் யாவரும் உற்சாகமாகக் கொண்டாட வேண்டிய ஒன்று.

இந்தி மற்றும் வங்காள சினிமாவைத் தாண்டி தென்னிந்தியாவுக்கு அரிதாகவே இந்த விருது வந்து சேர்ந்திருக்கிறது. ரஜினிக்கு முன்பு இந்த விருது வாங்கிய ஐம்பது பேரில் வெறும் பத்துப் பேர் மட்டுமே தென்னிந்தியர்கள் என்ற புள்ளிவிவரம் இதை உணர்த்தும்.

ரஜினி அறிமுகமானது, தமிழ் சினிமாவுக்கு நெருக்கடியான காலகட்டம். இன்று உதயநிதியை முன்னிறுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

1975-ல் அணையா விளக்காகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஸ்டாலினின் அண்ணன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு மாற்றாக உருவாக்க அதிரடியாகக் களமிறங்கினார் கருணாநிதி. ‘எங்களுக்கு ஒரிஜினல் எம்.ஜி.ஆர். போதும்’ என முடிவெடுத்தனர் மக்கள். மு.க.முத்து நடித்ததில் ‘பூக்காரி’ மட்டுமே 100 நாள் படம்.

எம்.ஜி.ஆரை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தமிழ் சினிமா தத்தளித்தது. மிகக் கடுமையான மின்வெட்டு தமிழகத்தில் நிலவியது. கர்நாடக அரசு சலுகைகள் வழங்கியதால் கோலிவுட் மைசூருக்கு இடம் மாறியது. 1975 ஜூலையில் அவசர நிலை வேறு. ரிலீஸாகும் ஒரு தமிழ்ப் படம் 50 நாள்கள் ஓடினாலே மிகப் பெரிய வெற்றி என்றானது. எம்.ஜி.ஆர் படங்கள் ரிலீஸாகவும் வழக்கம்போல் ஓடவும் ஆயிரம் தடைக்கற்கள். கட்சி மாறியதால் சிவாஜியின் படங்களுக்கும் பெரிய வசூல் இல்லை. ஜெய்சங்கரின் பட்ஜெட் படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவைப் பெருமளவு காப்பாற்றின.

1977, ஜூனில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்து தமிழ் சினிமாவுக்குப் புத்துயிர் கொடுத்தார். அவர் அரிதாரம் பூச முயன்றதும் பூஜையோடு நின்றது. தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆரின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்? கலைஞரின் ‘வண்டிக்காரன் மகன்’ படம் மூலம் ஜெய்சங்கரை எம்.ஜி.ஆருக்கு எதிராகக் களம் இறக்க ஏற்பாடுகள் நடந்தன.

அந்தச் சூழலில் ‘16 வயதினிலே’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ இரண்டு படங்களும் செப்டம்பரில் வெளியாகின. கோலிவுட்டில் இன்பப் பிரளயம் உருவானது. ‘16 வயதினிலே’ இரண்டாவது வார முழுப்பக்க விளம்பரத்தில் ‘இது எப்படி இருக்கு’ என்ற வாக்கியத்துடன் பரட்டை ரஜினி.

மூன்று நாளோ, நான்கு நாளோ, சுமார் மூவாயிரம் ரூபாய் ஊதியத்துக்கு உற்சாகமாக ரஜினி நடித்தார். தேசிய கீதம் போல் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் உதடுகளில் அரியாசனம் அமர்த்தி உச்சரித்த வார்த்தைகளாயின ‘இது எப்படி இருக்கு!’

அதே மாத இறுதியில் ‘ஆடு புலி ஆட்டம்.’ மழலைகள் தொடங்கி அரும்பு மீசைகள் வரை அத்தனையும் ‘இதுதான் ரஜினி ஸ்டைல்’ என்று உரத்துக் கத்தின. அடுத்தது ‘காயத்ரி.’ டைட்டில் ஓடுகிறது. ஹீரோ மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பெயரைக் காட்டிலும் வில்லன் ரஜினிக்குக் கூடுதல் வரவேற்பு. விசில் சத்தத்தில் அரங்கங்கள் அதிர்ந்தன.

அப்போது ரஜினியிடம் கைமாறியது தமிழ் சினிமா. இன்றளவும் அது மூச்சு விட ரஜினி பட ரிலீஸ்களே உதவுகின்றன. 70 வயதில் அவர் ஓய்ந்துவிடவில்லை.

அவரது எவர்கிரீன் ஹிட் படங்கள் போல சமீபகாலப் படங்கள் வசூலைக் குவிக்காமல்போயிருக்கலாம். ஆனாலும், அவர் படத்துக்கான எதிர்பார்ப்பு துளியும் குறையவில்லை.உடல்நலமில்லாமல் போய், மறுபிறவி எடுத்துவந்து அவர் நடித்த ‘கபாலி’ படத்துக்குக் கிடைத்த ஓப்பனிங், பல இளம் ஹீரோக்களைப் பொறாமைப்பட வைத்திருக்கும்.

இன்றைக்கும் கோடிகளைக் குவிக்கிற கோலிவுட்டின் ஆணிவேர் ரஜினி என்பதை அவரின் எதிரிகளும் மனமார ஒப்புக்கொள்வர்.

சினிமா என்பது பல ஆயிரம் பேருக்கு வாழ்வு தருகிற ஒரு பிசினஸ். தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடங்கி, சிறுநகர தியேட்டர்களில் முறுக்கு விற்பவர்கள் வரை சினிமாவை நம்பிப் பிழைக்கின்றனர்.

தியேட்டர்களுக்குக் கூட்டம் வந்தால்தான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். 46 ஆண்டுகளாக அப்படி தியேட்டர்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் கலைஞராக ரஜினி இருக்கிறார்.

ரஜினிக்கு ஒரு ஹீரோவுக்கான தோற்றம் கிடையாது; நிறம் கிடையாது. அவர் வசனம் பேசும் முறைகூட பல இயக்குநர்களுக்குத் திருப்தி அளித்ததில்லை. அவருக்கு நடனமும் இயல்பாக வராது.இப்படி ஒரு ஹீரோவுக்கான இலக்கணங்கள் எதுவுமே அவரிடம் இருந்ததில்லை.

ஆனால், தமிழ் சினிமா கண்ட முதல் ‘மேன்லி ஹீரோ’ அவர்தான்.

அவருக்கு முன்பு வந்த உச்ச நட்சத்திரங்கள் பலரும் பாய்ஸ் கம்பெனி நாடக ஸ்த்ரீ பார்ட் கலைஞர்களாக இருந்தவர்கள். அதனாலேயோ என்னவோ அம்மாபெரும் நடிகர்களின் தோற்றத்திலும் நடிப்பிலும் பெண்மையின் சாயல் மிக அதிகமாகவே மிளிர்ந்தது.

அரிதாரம் பூசிக்கொள்பவர்களுக்கு முகம் மிக முக்கியம். இது ‘தோற்றத்திற்காகக் கிடைத்த விருது’ என்றால், ஆமாம்; அதுவும் ஆயிரம் விழுக்காடு நிஜம். சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற முன்னாள் பேருந்து நடத்துநரின் தோற்றம் கே.பாலசந்தரைக் கவர்ந்தது. அதன் விளைவே இன்றைய தாதா சாகேப் பால்கே விருது.

உதிரி நடிகராக உதயமாகி அதுவரையில் தமிழ் சினிமா காணாத அதிசய வில்லனாக வெற்றி நடை போட்டவர். ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி ஜெட் வேகத்தில் வளர்ந்தார். மற்றவர்கள் எளிதாக நடிக்க முடியாத வேடங்கள் ஒவ்வொன்றும். ‘மூன்று முடிச்சு’ பிரசாத், ‘அவர்கள்’ ராமநாதன், ‘புவனா ஒரு கேள்விக்குறி’ சம்பத், ‘காயத்ரி’யை புளூ பிலிம் எடுக்கும் கணவன் ராஜரத்தினம், சைக்கிள் செயின் சுழற்றும் ‘தப்புத்தாளங்கள்’ தேவா என ரஜினி வாழ்ந்து காட்டியது எத்தனை எத்தனை.

‘‘பெண்ணை ஆராயாதே… அனுபவி’’ என்று கமலுக்கு அறிவுரை சொல்லும் ‘அவள் அப்படித்தான்’ ரஜினியை இன்றும் ரசிக்காதவர் யார்? ஸ்ரீதரின் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் கமலின் காதலி ஸ்ரீப்ரியா. ‘அவள் எனக்குத்தான்’ என்று ரஜினி வசனம் ஏதுமின்றி கமலிடம் சுட்டிக்காட்டும் காட்சியில் ஸ்ரீதரே அசந்துவிட்டார். ‘முள்ளும் மலரும்’ காளி வேடம் ரஜினியைத் தவிர வேறு யாரால் நெருங்க முடியும்? அதிகம் வசனம் பேசாமல், காளிக்கான தோற்றப் பொலிவோடும் விறைப்போடும் வெற்றி வலம் வந்தார் ரஜினி. முதன்முதலில் ரஜினிக்கு சிறந்த நடிகர் பரிசு கிடைத்தது. இன்னொரு ‘பாசமலர்’ என்று ‘முள்ளும் மலரும்’ படத்தைக் கொண்டாடியது தமிழகம். அத்திரைப்படம் மிகச்சிறப்பாக உருவாகவும் வெளிவரவும் முக்கியக் காரணம் ‘கலைஞானி’ கமல்.

தாதா சாகேப் பால்கே விருது கிடைத்ததும், கே.பாலசந்தருக்கும் கமலுக்கும் நன்றி சொன்னார் ரஜினி. ஏனோ எஸ்.பி.முத்துராமனையும் மகேந்திரனையும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் மறந்துவிட்டார். ரஜினியின் நடிப்புச்சக்கரம் இன்றுவரை சுழல்வதற்கு அச்சாணி அல்லவா எஸ்.பி.முத்துராமன்! ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘நெற்றிக்கண்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிப்பில் ரஜினியைச் சிகரமாக உயர்த்தியவர்.

அப்பா,அண்ணன் வேடங்களில் மற்றொரு சிவாஜியாக மனதை மயிலிறகால் வருடியவர் சூப்பர் ஸ்டார். ஆக்‌ஷன் ஹீரோவால் நேசமிக்க தந்தையாகவும் கண்களைக் குளமாக்க முடியும் என்பதை ‘தர்பார்’ வரை நிரூபித்தவர் ரஜினி.

எப்படிப்பட்ட வேடங்களையும் ரஜினியால் ஜொலிஜொலிக்க வைக்க முடியும் என்பதற்கு ‘மூன்று முகம்’ மிக முக்கிய சாட்சி. அதன் இயக்குநர் ஏ.ஜெகன்னாதன், அலெக்ஸ் பாண்டியனாக ரஜினியின் விஸ்வரூபத்தை உருவாக்கியவர்.

‘அந்தாகானுன்’ மூலம் ரஜினி இந்தியிலும் முத்திரை பதித்தார். அவர் மும்பையில் கால் ஊன்றி சாதிக்க உதவியது ‘ஜான் ஜானி ஜனார்த்தன்.’ மூன்று முகத்தின் இந்திப் பதிப்பு. வடக்கே போய் மூன்று பாத்திரங்களில் வாகை சூடிய முதல் நட்சத்திரம்!

கோட் என்கிற உடையை ‘பில்லா’வில் ரஜினி அணிந்து வருகிற அழகே தனி. ரஜினிக்குப் பொருந்துகிற மாதிரி கோட் வேறு எவரையும் வசீகரமாகக் காட்டுவதில்லை.

நம்மவர் கமலுக்கு பத்மஸ்ரீ தவிர வேறு எந்த தேசிய அங்கீகாரங்களும் கிடைக்காதது அநியாயமே! சகலகலா வல்லவனுக்கு மட்டுமல்ல, சகலகலாவல்லியாக நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பி.பானுமதிக்கேகூட பால்கே விருது தரப்படவில்லை. நடிகைகள் பத்மினி, லட்சுமி, வாணிஸ்ரீ, ராதிகா ஆகியோருக்கு பத்மஸ்ரீகூட கிடையாது. அதற்காக, ரஜினிக்குக் கிடைத்ததைக் கொண்டாடாமல் போய்விட முடியுமா?

தங்க மனசுக்காரன் ரஜினி. தனது வெற்றிகளுக்காக எவரையும் பலி கொடுக்காதவர். எம்.ஜி.ஆரின் வானளாவிய புகழையும் ஜெய்சங்கரின் எளிமையையும் ஒருங்கே பெற்றவர். தன்னை வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர்களைத் தூக்குக்கயிற்றைத் தேட வைக்கும் நடிகர்களுக்கு மத்தியில், தன் படங்களால் நஷ்டம் அடைந்ததாகச் சொன்னவர்களின் துயர் துடைத்த தமிழ் சினிமாவின் தங்க மகன்.

இந்திய சினிமாவை எகிப்தின் கெய்ரோவில் எதிரொலித்த நடிகர் திலகத்துக்கு அவரே எதிர்பாராத மிக அதிக சம்பளம் கொடுத்து அழகு பார்த்தவர் படையப்பா.

தமிழ் சினிமாவுக்குத் தமிழ் பேசாத மாநிலங்களிலும் மார்க்கெட் உருவாக்கிக் கொடுத்தவர். இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ரஜினியால் வசூல் பார்க்கிறார்கள். ‘முத்து’ படத்துக்குப் பிறகு ஜப்பானும் ரஜினியின் தேசமாகிவிட்டது.

‘கபாலி’ படப்பிடிப்புக்காக மலேசியா சென்றபோது ரஜினியை மலேசியப் பிரதமர் ‘தலைவா’ என்றழைத்தார். இன்று அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுத்ததும், மோடி ‘தலைவா’ என்று அழைத்திருக்கிறார்.

விருதுகளின் பின்னே இருக்கும் அரசியல் பற்றிப் பேசுவதில் என்ன இருக்கிறது? 1976-ம் ஆண்டில் காமராஜருக்கு ‘பாரதரத்னா’ விருது கொடுத்தார் இந்திரா காந்தி.

அடுத்த ஆண்டு தேர்தலில் அவருக்கு அது ஆதாயம் தரவில்லை. 1989 தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்று ஆட்சியைப் பிடிக்கக் கனவு கண்டது. ‘எம்.ஜி.ஆருக்கு பாரதரத்னா விருது கொடுத்தால், எம்.ஜி.ஆரின் ஓட்டுகளை மொத்தமாக அள்ளிவிடலாம்’ என்று யாரோ பிரதமர் ராஜீவ் காந்தியிடம் ஆலோசனை சொல்லியிருப்பார்கள் போல! தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அந்த அறிவிப்பு வெளியானது. ஆனாலும், காங்கிரஸுக்கு எம்.ஜி.ஆர் ஓட்டுகள் கிடைக்கவில்லை. விருதுகளின் பின்னால் அரசியல் இருக்கலாம். ஆனால், விருதுகளால் அரசியல் வெற்றிகள் தீர்மானிக்கப்படுவதில்லை.

இதோ… வரும் மே 3-ம் தேதி டெல்லி சென்று தாதா சாகேப் பால்கே விருது பெறவிருக்கிறார் ரஜினி. அதே மேடையில் தனுஷும் சிறந்த நடிகர் விருது பெறுகிறார். மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் ஒரே சமயத்தில் சினிமாவுக்கான உயரிய தேசிய விருதுகள்.

தமிழ் சினிமாவை ஆள்பவர் விருது வாங்கும் அந்த தினத்துக்கு முதல் நாளே, ‘தமிழகத்தை யார் ஆட்சி செய்யப்போகிறார்கள்’ என்பது முடிவாகியிருக்கும்.

***

ரஜினியை ‘சூப்பர் ஸ்டாராக’ மாற்றியதில் முக்கியப்பங்கு எஸ்.பி.முத்துராமனுக்கு உண்டு.

தன் வசூல் நாயகனுக்கு ‘தாதாசாகேப்’ விருது கிடைத்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார் அவர்.”உரிய மனிதருக்கு உரிய நேரத்துல விருது கிடைச்சிருக்கு.

விருது அறிவிப்பு வந்தவுடனே போன் பண்ணி வாழ்த்து தெரிவிச்சேன். ‘உங்க மாணவனுக்கு கிடைச்சிருக்கு’னு சந்தோஷப்பட்டார்.

எங்க உறவு பல வருஷங்களுக்கு அப்பாற்பட்டது. 1977-ல ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்துலதான் முதல் முறை என்கிட்ட வந்து சேர்ந்தார். அப்பவே அவருக்குனு பஞ்ச் டயலாக்ஸ் கொடுத்திருந்தோம்.

அந்த நேரத்துல அவருக்கு சரளமாத் தமிழ் பேச வராது. இருந்தும், முயற்சி பண்ணி பேசினார். இப்போ ரஜினி என்றாலே பஞ்ச் டயலாக்ஸ்னு ஆகிப்போச்சு. கிட்டத்தட்ட 25 படங்கள் வரைக்கும் ரஜினிகூட வேலை பார்த்திருக்கேன்.

படங்கள்னு சொல்றதை விடவும் ரஜினியை வெச்சு 25 கதாபாத்திரங்களை இயக்கியிருக்கேன்னு சொல்லலாம்.”

cinema.vikatan.com

Related Articles

Latest Articles