திகா கட்டிய வீடுகள் லயத்தைவிட மோசமாக உள்ளது

தோட்டக் குடியிருப்பு பிரதேசத்துக்கு கிராம அந்தஸ்து வழங்குவதற்கும், பிரதான பாதை ஓரங்களில் புதிய கிராமங்களை அமைப்பதற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை வெறும் லயன் அறைகள் என கொச்சைப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். தோட்டக் குடியிருப்பு பிரதேசங்களில் தோட்ட லயன்கள், தனி வீடுகள், இரட்டை வீடுகள், தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடில்கள், மரக்கறி தோட்டங்கள், கோவில்கள், விளையாட்டு மைதானங்கள், வாசிகசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், போன்ற பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன.

தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் தோட்டங்களில் வேலை செய்பவர்கள், மற்றும் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து தற்போது தோட்டங்களில் வேலை செய்யாது வேறு தொழில்துறையை மேற்கொள்பவர்கள் என இரு வகையினர் வசித்து வருகின்றனர்.

எனினும் இக்குடியிருப்பு பிரதேசம் தோட்ட கம்பனிகளின் பிடியில் சிக்கி உள்ளதால் அங்கு வாழுகின்ற மக்களை சுதந்திரமாக வாழ்வதற்கு கம்பனிகள் இடம் கொடுப்பதில்லை. அத்துடன் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் வேலை செய்யாதவர்கள் என பிரித்துப் பார்க்கப்படுகின்றனர்.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்தாலும் தோட்ட முகாமையாளரால் அத்துமீறி குடியிருக்கிறார்கள் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டால் அவர்களைக் எவ்வித விசாரணையும் இன்றி குறிப்பிட்ட குடியிருப்பில் இருந்து வெளியேறும்படி பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு குறுங்கால அறிவித்தலை விடுத்து அவர்களை வெளியேற்றுகின்றது.

அரச காணி சட்டம் இறுக்கமாக இருப்பதினால் இதிலிருந்து எவரும் தப்ப முடியாது. இந்த நிலையிலிருந்து தோட்ட குடியிருப்பாளர்களை மீட்டெடுப்பதற்காகவே நாம் நீண்ட காலமாக தோட்டக் குடியிருப்பு பிரதேசத்துக்கும் தோட்ட முகாமைக்கும் இடையிலான தொடர்பை துண்டித்து தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை வேராக்கும்படி கூறி வருகிறோம்.

ஐந்து தலைமுறைகளாக வாழ்ந்தவர்களின் வாழ்விடத்தின் தலைவிதியை ஐந்து மாதங்கள் தோட்ட முகாமையாளராக வந்தவர் தீர்மானிக்கின்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

தோட்ட முகாமையாளரின் அனுமதி இல்லாமல் மலசல கூடங்கள் கட்ட முடியாது, தற்காலிக குடில்கள் அமைக்க முடியாது, கால்நடை வளர்ப்பதற்கு தொழுவங்கள் அமைக்க முடியாது, வீடுகளுக்கு மின்சாரம் பெற முடியாது, இவ்வாறு தோட்ட குடியிருப்பாளர்களை இரும்பு கரம் கொண்டு நசுக்குவதில் இருந்து விடுவித்துக் கொள்வதற்கு தோட்ட முகாமைக்கும் குடியிருப்பு பிரதேசத்துக்கும் உள்ள உறவு முறிக்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில் தோட்டத் தொழிலாளர்களை ஏழு பேர்ச்சஸ் காணியில் முடக்கிவிட்டு அதுதான் புதிய கிராமங்கள் என்று வரையறுப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அதுவும் 20 ,25 வீடுகள் கட்டப்பட்டு அவற்றுக்கு கடந்த காலங்களில் கிராமம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அவை தரத்தில் தற்போதய லயன்களை விட மோசமான நிலையில் இருக்கின்றன.

இருப்பினும் பாதை ஓரங்களில் சகல வசதிகளையும் கொண்ட நவீன கிராமங்களை அமைக்கும் திட்டத்துக்கு நாங்கள் இரு கரம் உயர்த்தி ஆதரவு தெரிவிக்கிறோம். அவ்வாறான நிலை வரவேண்டும் என்பதில் எமக்கும் முழுமையான உடன்பாடு இருக்கிறது. ஆனால் கடந்த நல்லாட்சி காலத்தில் அவ்வாறான ஒரு கிராமம் கூட உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் அவ்வாறான திட்டத்தை முன்மொழிந்து உள்ள தலைவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை தாராளமாக செய்யட்டும் .

அதற்கு எமது பரிபூரண ஆதரவும் கிடைக்கும். ஆனால் தற்போது தோட்ட முகாமையாளர்களிடமிருந்து விடுபடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கம் முன் வைத்திருக்கின்ற குடியிருப்பு பிரதேசங்களை கிராமமாக்கும் திட்டம் உதவியாக அமையும். அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் அங்க வகிக்கும் சகல மலையக தலைவர்களும் இணைந்து குடியிருப்பு பிரதேசத்துடன் குடியிருப்பாளர்களின் மரக்கறி தோட்டங்கள், கால்நடை வளர்ப்புக்கான புத்தரைகள் மற்றும் தோட்ட கோயில்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுவான இடங்களையும் சேர்த்து குடியிருப்பு பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதில் வெற்றி பெற வேண்டும்.

இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், தோட்டங்களை பூர்வீகமாக கொண்டு தலைநகரில் வேலை செய்யும் பெருமளவிலானோர், தோட்டங்களை வதிவிடமாக கொண்ட ஆசிரியர்கள் மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் போன்றோர் தமது இருப்பிடத்தை உறுதி செய்து கொள்வதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கவின் இத்திட்டம் சாதகமாக அமையும்.

தற்போது தோட்டங்களில் புதிதாக அமைக்கப்படுகின்ற இந்திய உதவி திட்டத்தின் மூலம் அமைக்கப்படுகின்ற வீடுகள் உட்பட தோட்டங்களில் கட்டப்படுகின்ற வீடுகள் தோட்ட தொழிலாளர்கள் மட்டுமே உரித்து உடையவர்கள் என்று வரையறுக்கப்படுவதால் தோட்டங்களில் பிறந்து பரம்பரையாக வாழ்ந்து தோட்டத்தில் வேலை செய்யாமல் வேறு துறைகளில் வேலை செய்கின்ற மக்களின் வீட்டுத் தேவைக்கு எவ்வித வழியும் கிடையாது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles