பழனி திகாம்பரம் தலைமை வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ரிசாத் பதியுதீன் தலைமை வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் செயற்பாட்டு மக்கள் பிரதிநிதிகள் பலர், சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இன்று அவருடன் இணைந்து கொண்டனர்.
இது தவிர புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பொது வேட்பாளரான ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் செய்னுல் ஆப்தீன் எஹியா உட்பட பல உள்ளுராட்சி சபை முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இன்று (04) கொழும்பு பிளவர் வீதியில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரின் வெற்றிக்குப் பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்தனர்.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் இணைந்து கொண்டார்.
இதேவேளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன், நோர்வுட், அக்கரபத்தனை, மஸ்கெலியா, நுவரெலியா உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் 11 பேர், பொது வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக இன்று அவருடன் இணைந்து கொண்டனர். ஜனாதிபதியின் வெற்றிக்காகத் தாம் தொடர்ந்து அர்ப்பணிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுதவிர, புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் நடராஜா ரவிகுமார், பொதுச் செயலாளர் யோகராஜா பிள்ளை உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர் குழுவும் இன்று சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்ய இன்று அவருடன் இணைந்து கொண்டார்கள்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணிலின் கரத்தைப் பலப்படுத்தும் நோக்குடன் ஏற்கெனவே பல தமிழ், முஸ்லிம் கட்சிகளும் மாகாண சபை, உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து அவரின் வெற்றியை பெருவெற்றியாக்க செயற்பட்டு வருகின்றனர்.