திருமலை சம்பவம் – கைதான ஆறு பேரும் விளக்கமறியலில்!

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் திலீபனின் உருவச்சிலை தாங்கிய பாரவூர்திமீது தாக்குதல் நடத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அறுவரும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று (18) குறித்த சந்தேக நபர்கள் முற்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும், இவர்கள் 35 இற்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles