நானுஓயா பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பிரதேச வைத்திய சாலையை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு சேவையை பெற்றுக் கொடுப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
இதுதொடர்பாக அந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ் இந்த வைத்தியசாலை புனரமைக்கப்பட்டு அன்மையில் திறந்து வைக்கப்பட்டது.
திறந்து வைக்கப்பட்ட மறுதினம் முதல் இன்று வரை இதற்கு நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் நுவரெலியா பிரதேசசபை நீரை துண்டித்துள்ளது.
திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு பிரதேச சபையின் தலைவருக்கு அழைப்பு விடுக்காமையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நீர் வசதியை பெற்றுக் கொடுப்பதற்கு நுவரெலியா பிரதேச சபை முன்வர வேண்டும்.
அண்மையில் குறித்த வைத்தியசாலை திறந்து வைப்பதற்கு அங்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பிரதேச சபை தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாமை காரணமாக அதனை திறந்து வைக்காமல் திரும்பி சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து அங்கு வருகை தந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ் பி ரத்னாயக்க புனரமைக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பாவனைக்கு கையளித்துள்ளார்.
இன்றைய சூழ் நிலையையும் பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நீர் வசதியை பெற்றுக் கொடுப்பதற்கு நுவரரெலிய பிரதேச சபை முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக நுவரெலியா பிரதேச சபையின் தலைவருடன் தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்ட பொழுதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.