இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த, தைப் பொங்கல் விழாவுக்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய தைப்பொங்கல் விழா நிகழ்வில் தென்னிந்திய நடிகைகள் பங்கேற்றமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மக்களின் வரி செலுத்தும் பணத்தில் இந்த விழா நடத்தப்பட்டதா? வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் அவதியுறும் இவ்வேளையில் ஜீவன் தொண்டமான் ஏன் தேசிய பொங்கல் விழாவை இவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடினார்? நுவரெலியா மாவட்டத்தில் மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துள்ளதோடு, பல குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றன.
மக்கள் 1,00,000 க்கும் அதிகமான வாக்குகளை அளித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி அவர்களுக்கான சேவைகளை பெற்றுக் கொடுத்தனர். ஆனால், தென்னிந்திய நடிகைகளை அழைத்து வருகிறார் ஜீவன் தொண்டமான். வருகைக்கான பணம் எங்கிருந்து வந்தது? இவ்வாறு மக்களின் பணத்தை வீண் விரயம் செய்தமைக்கு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஜீவன் தொண்டமான் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். மேலும், தென்னிந்திய நடிகைகளை அழைப்பதற்கு பதிலாக, உள்ளூர் கலைஞர்களை கலந்துகொள்ள ஊக்கப்படுத்தியிருக்கலாம் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜீவன் தொண்டமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில், வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்தனர். ஏனைய தேசிய நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் தொகைகளுடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் குறைந்தளவு பணமே செலவிடப்பட்டது. பொங்கல் விழாவுக்கு அதிகளவு செலவிடவில்லை. செலவு மிகுந்த ஆடம்பர களியாட்டமாக இந்நிகழ்வு நடத்தப்படவில்லை.
செழுமையான கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்பட்டது. விருது வென்ற தென்னிந்திய நடிகைகள் அழைத்து வரப்பட்ட விடயத்தை சிலர் அற்பமான விடயமாக விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும் அது அற்பமான விடயமல்ல. தமிழ்நாடுட்டன் காணப்படும் நீண்ட கால உறவுகளின் அடிப்படையில்தான், நடிகைகளை அழைத்து வந்தோம். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் நடிகைகள் இலங்கை விஜயம் செய்திருந்தனர்.
நடிகைகள் தங்களது உரைகளில் அர்த்தபூர்வமான பல விடயங்களை எடுத்துரைத்தனர். பெண்களை வலுவூட்டல், பிள்ளைகளின் பாடசாலை கல்வி போன்றவற்றை அவர்கள் தங்களது உரைகளில் வலியுறுத்தியுள்ளனர். சிலர், பெண் ஆளுமைகளை மலினப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுவது வேதனை அளிக்கின்றது.
