ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை பெறும் மொட்டு கட்சியின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
அதேபோல ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் மொட்டு கட்சி இரு அணிகளாக பிளவுபட்டு நிற்கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என நாமல் உள்ளிட்ட தரப்பினர் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் குறித்த மொட்டு கட்சியின் நிலைப்பாடு என்னவென்பது ஜனாதிபதிக்கு அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தப்படும் என அறியமுடிகின்றது.