ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை பெறுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டுள்ளதால் இறுதி அஸ்திரத்தை ஏவுவதற்கு பஸில் ராஜபக்ச தயாராகிவருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
எனினும், இதற்கான ஆதரவு தளம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே இந்நடவடிக்கையில் அவர் இறங்குவார் எனத் தெரியவருகின்றது.
முதலில் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கவில்லை. அரசமைப்பின் பிரகாரம் செப்டம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் முதல்வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் மொட்டு கட்சி ஆராய்ந்துவருகின்றது.
அவ்வாறானதொரு யோசனை நிறைவேறுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போதுகூட 117 வாக்குகளே ஆளுங்கட்சிக்கு இருந்தது.
மொட்டு கட்சியில் சிலர் ரணில் பக்கம் நிற்கின்றனர். நிமல் லான்சா, அநுரயாப்பா உள்ளிட்ட குழுவினரும் ரணில் பக்கம் நிற்கின்றனர். சுதந்திரக்கட்சியினரும் ஜனாதிபதி பக்கமே உள்ளன.
எனவே, குறித்த பிரேரணைக்கு 113 பேரின் ஆதரவை பெறமுடியுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. ஏனெனில் இதொகா உள்ளிட்ட பங்காளிக்கட்சிகள்கூட ரணில் ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளன.
இந்நிலையில் 113 ஐ பெறமுடியுமா என ஆராயப்பட்டுவருகின்றது, அதற்கான வாய்ப்பு அமையும் பட்சத்தில் ஏப்ரல் இண்டாம்வார நாடாளுமன்ற அமர்வின்போது குறித்த யோசனை முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், முதலில் ஜனாதிபதி தேர்தலை முன்வைப்பதில் ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார்.