விபசாரத்தை சட்டப்பூர்வமாக்கும் எந்தவொரு திட்டமும் தேசிய மக்கள் சக்தியிடம் கிடையாது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விபசாரம் சட்டப்பூர்வமாக்கப்படும் என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார் என சுட்டிக்காட்டி, அதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி என்பன கடுமையாக விமர்சித்துவந்தன.
இந்நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரில்வின் சில்வா,
“ தேசிய மக்கள் சக்திக்கான மக்கள் ஆதரவு பெருகிவருவதால் சில கட்சிகளுக்கு பீதி ஏற்பட்டுள்ளது. அதனால்தான் எமது அணியில் உள்ள உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துகளை முழுமையாக செவிமடுக்காது, அந்த கருத்தில் உள்ள ஆழத்தை புரிந்துகொள்ளாது, ஒரு பகுதியை மட்டும் வெட்டி எடுத்து அதை வைத்து பிரச்சாரம் செய்து, சேறுபூசுவதற்கு முற்படுகின்றனர்.
விபசாரத்தை சட்டப்பூர்வமாக்கும் திட்டம் எம்மிடம் இல்லை. இதற்கு முன்னரும் அந்த கொள்கையில் நாம் இருந்தது கிடையாது. எமது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் அந்த விடயம் உள்ளடக்கப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தி மகளீர் மாநாடுகளை நாடளாவிய ரீதியில் நடத்திவருகின்றது. அந்த மாநாடுகளின்போதும் அவ்வாறு எதுவும் கூறப்படவில்லை.” -என்றார்.
