ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்தே மின் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது, மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது, இது தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் நாமல் கூறியவை வருமாறு,
“ அவ்வாறு இருக்கலாம். இதற்கு முன்னரும் இலங்கை வரலாற்றில் அவ்வாறு நடந்துள்ளது. கட்டணங்கள் மேலும் குறைவடைந்தால் அது மக்களுக்கு நல்லது.
ஜனாதிபதியுடன் எனக்கு தனிப்பட்ட ரீதியில் பிரச்சினை இல்லை. கொள்கை ரீதியில் வேறுபாடுகள் உள்ளன. அது கோபம் கிடையாது.” – என்றார்.
அதேவேளை, தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார். கட்சியின் அரசியல் குழுகூடி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளமை தொடர்பில் ரணில், தம்மிக்க பெரேரா ஆகியோர் எமது கட்சிக்கு இன்னும் உத்தியோகப்பூர்வமாக தெரியப்படுத்தப்படவில்லை.” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
