தேர்தல் கோரிய சஜித்மீது சீறிப்பாய்கின்றது மொட்டு கட்சி!

” நெருக்கடியான சூழ்நிலையிலும், அதிகார ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்காக பொதுத்தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோருவது தவறானதொரு தலைமைத்துவ பண்பாகும்.” – என்று அமைச்சர் காமினி லொக்குகே விமர்சித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு விமர்சித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி நாட்டை இயல்பு நிலைமைக்கு கொண்டுவருவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசு போராடிக்கொண்டிருக்கின்றது. அதன் பயனாக இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவருகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் சிலர் பதவி விலகுகின்றனர். மேலும் சிலர் பொருத்தமற்ற விதத்தில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். குறிப்பாக மக்கள் ஆணையைக்கோரி, ஆட்சியை ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகின்றார். கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. மாறாக அதிகார ஆசையால் தேர்தல் கோருகின்றனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவானது தேர்தலுக்கு அஞ்சும் கட்சி கிடையாது. உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கு கூறிக்கொள்கின்றோம். நல்லாட்சியின்போதுதான் மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்பட்டது. அத்தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை. நாட்டின் கடைசி குடிமகனுக்கு தடுப்பூசி ஏற்றும்வரை தான் ஏற்றிக்கொள்ளப்போவதில்லை என சஜித் சவால் விடுத்திருந்தார். பின்னர் இராணுவ வைத்தியசாலைக்குச்சென்று அதனை ஏற்றிக்கொண்டார். இன்றும் பொறுப்பற்ற விதத்தில் கருத்து வெளியிடுகின்றார். ” -என்றார்.

Paid Ad
Previous articleலங்கா ஹொஸ்பிட்டில் வளாகத்தில் கைக்குண்டு மீட்பு! பொலிசார் சுற்றிவளைத்து சோதனை!!
Next articleகொரோனாவிலிருந்து நாடு மீள வரதராஜப் பெருமாளை வழிபட்ட ஞானசார தேரர்