இராகலை, மாகுடுகல தோட்டத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறினர். தொழிலாளர்கள் இன்று (19.05.2021) முதல் வேலைக்கு திரும்பினர். மலையக மக்கள் முன்னணி அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து நடத்திய தொடர்ச்சியான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்
மாகுடகல தோட்டத்தில் தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.இதன்போது இது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன் குறிப்பாக தோட்ட நிர்வாகத்தில் இராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக தோட்ட தொழிலாளர்கள் தங்களுடைய முழுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இவ்வாறான ஒரு நிலையில் மலையக மக்கள் முன்னணி ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து தோட்ட நிர்வாகம் மற்றும் நுவரெலியா தொழில் ஆணையாளர் ஆகியோருடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக தோட்ட நிர்வாகம் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றுவதாகவும் அதே நேரத்தில் மாகுடுகல கிளவன்டன் தோட்டத்தை மத்துரட்ட பிளான்டேசன் கம்பனி பொறுப்பேற்று நடத்துவதற்கு தீர்மானித்ததுடன் புதிய தோட்ட முகாமையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள் இன்று (19.05.2021) காலை முதல் வேலைக்கு திரும்பியதுடன் எதிர்வரும் வாரம் தோட்டத் தொழிலார்களுக்கான முற்பணம் ஒன்றையும் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தவருவதாகவும் மத்துரட்ட பிளான்டேசன் நிறுவனத்தின் முகாமையாள் தெரிவித்தள்ளார்.










