மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது என அறிவிப்புகள் விடுக்கப்பட்டுவந்தாலும், அதனை பெறுவதற்கு பல வழிகளிலும் போராடவேண்டிய நிலைமை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சம்பள உயர்வுக்கு முன்னர் ஒரு நாள் பெயருக்கு 16 முதல் 18 கிலோ கொழுந்தே பறிக்க வேண்டும். தற்போது அந்த அளவு 20 ஆக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் சம்பள உயர்வின் பலனை அனுபவிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவிப்பு விடுத்தாலும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சில தோட்டங்களில் 20 கிலோ கொழுந்து எடுக்காவிட்டால் அரைநாள் பெயரே அதாவது பாதி சம்பளமே வழங்கப்படுகின்றது.
எனவே, இனியாவது தொழிற்சங்கங்கள் உரிய வகையில் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.