ஹப்புத்தளை பகுதியில் ஐந்து பெருந்தோட்டப்பிரிவுகளில் இன்றைய தினமும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹப்புத்தளை பிரதேச செலயகத்துக்குட்பட்ட தம்பெதன்ன, பண்டாரஎளிய, தியகல்ல, மவுசாகல, புதுக்காடு பகுதியை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தோட்ட நிர்வாகத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் பெறுவதாயின் 20 கிலோ கொழுந்து பறிக்க கோரி அழுத்தம் கொடுப்பதாகவும் குறைந்த எடையை காட்டும் தராசில் ஏமாற்றி புதிய நவீன இலத்திரனியல் தராசை பெற்று தருமாறு வலியுறுத்தி இந்த தோட்டத் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் இன்றும் ஈடுபட்டனர்.
தம்பெதன்ன தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஒன்று கூடிய தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திடம் இது தொடர்பாக காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். தோட்ட நிர்வாகம் இணங்காத காரணத்தினால் தொடர்ந்தும் இவர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த அப்புத்தளை போலீசார் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தியதோடு ஹப்புத்தளை போலீஸ் அதிகாரிகளினால் சுமார் 15 நிமிடம் வரை உரையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தொடர்ந்தும் நீடித்த பேச்சுவார்த்தையினை போலீசார் கொரோனா தோற்று சட்டத்திற்கு அமைவாக கலைந்து செல்லுமாறு வலியுறுத்தி இதன்பின்னர் தோட்டத் தொழிலாளர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
எனினும் தீர்வு கிட்டும் வரை தமது பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எம். செல்வராஜா, துளை










