” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய போராட்டத்தை நாம் கைவிடவில்லை. இது தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த வரவு- செலவுத் திட்டத்திலும் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது நாட்டில் பெருமளவான தனியார் ஊழியர்களும் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படை சம்பளம் நெடுநாட்களாக அதிகரிக்கப்படவில்லை. இந்த தொகையை நாம் அதிகரித்துள்ளோம். அடுத்த வருடமும் அதிகரிப்பு இடம்பெறும்.
எனினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுதான் சவாலாக உள்ளது. அவர்களுக்கு கிடைக்கப்பெறும் சம்பளம் போதாது. இக்காலப்பகுதியில் தோட்ட நிர்வாகம் இலாபம் ஈட்டியுள்ளன. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு பெருந்தோட்ட அமைச்சு, நிதி அமைச்சு என்பன உயிர தலையீடுகளை மேற்கொண்டுவருகின்றன.
சம்பள உயர்வை விரைந்து பெற்றுக்கொடுக்க முடியாமை தொடர்பில் கவலையடைகின்றோம். எனினும், நாம் அதற்குரிய போராட்டத்தை கைவிடவில்லை. நிச்சயம் உறுதிமொழியை நிறைவேற்றுவோம். அடுத்த சில மாதங்களில் இப்பிரச்சினை தீரும்.” – என்றார்.