“ ஒரு குடும்பத்தால்தான் இந்நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது. அதேபோல ஒரு குடும்பத்தால்தான் பெருந்தோட்ட சமூகம் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதியும், அமைச்சர்களும் அறிவிப்பு விடுத்தனர். பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இவ்வாறு செய்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.
சம்பள உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகின்ற செயலில்தான் அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்ற அமைச்சர்கள் செய்கின்றனர். இந்த நாடகம் இன்று அம்பலமாகியுள்ளது.
மக்கள் சம்பள உயர்வின்றி பட்டினியில் வாடும்போது, மத்திய மாகாண ஆளுநரிடமிருந்து இணைப்பாளர் பதவி பெறுகின்றனர். இவ்வாறு அவர்கள் சலுகை அரசியலையே நடத்துகின்றனர்.
4 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது. 5 ஆம் திகதி சிஎல்எப்பில் (கொட்டகலை) இருக்ககூடிய பங்களாவில் தோட்ட முகாமையாளர்களை அழைத்து அவர்களுக்கு விருந்துபசாரம் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு காட்டிக்கொடுப்பவர்கள்தான் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.” – என்றார்.










