இலங்கையில் ஜனவரி 15 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான 9 நாட்களுக்குள் 8 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் ஜனவரி 15 ஆம் திகதி இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
ஆட்டோவில் இருந்த இருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
‘படா ரஞ்சி” என அழைக்கப்படும் செந்தில் ஆறுமுகன் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இது பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலாக கருதப்படுகின்றது.
சுட்டுக்கொல்லப்பட்டவர் இந்தியாவில் தலைமறைவாகியுள்ளார் எனக் கூறப்படும் பாதாள குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் உதவியாளராக இவர் செயற்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
ஜனவரி 20 ஆம் திகதி 24 வயது இளைஞர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
அதேவேளை ஜனவரி 22 ஆம் திகதி அபே ஜனபலவேகய கட்சியின் தலைவர் உட்பட ஐவர் பெலியத்தயில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுவும் பாதாளகுழு மோதலாக கருதப்படுகின்றது.
கம்பஹா, கஹடான கணாராம விகாரையில் நேற்று நண்பகல் 45 வயதுடைய பௌத்த தேரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். காணி பிரச்சினையொன்றை அடிப்படையாகக்கொண்டு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்டவை, சந்தேக நபர்கள் எவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன.
