ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்காக பிரதான பிரசார மேடைகளில் ஏறுவதற்கு கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என தெரியவருகின்றது.
தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு மொட்டு கட்சியின் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பதில்லை எனவும், ஓரிரு கூட்டங்களில் மாத்திரம் கலந்துகொள்வதெனவும் மஹிந்த ராஜபக்ச முன்னதாக முடிவெடுத்திருந்தார்.
எனினும், மொட்டு கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்ச கடைசி நேரத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தனது மகனின் வெற்றிக்காக கூட்டங்களில் பங்கேற்கும் முடிவை மஹிந்த எடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.
எனினும், ஓரிரு கூட்டங்களில் மட்டுமே மஹிந்த உரையாற்றக்கூடும் எனவும், ஏனைய கூட்டங்களில் நாமலுக்கு ஆதரவு திரட்டி அமர்ந்திருப்பார் எனவும் தெரியவருகின்றது.










