நுவரெலியா மாவட்டத்துக்குள் நுழையும் புதிய மதுபானசாலைகள்

இலங்கையில் மதுபானத்துடன் தொடர்புடைய தீங்கு மற்றும் மது பாவனையால் வருடாந்தம் ஒவ்வொரு 100,000 மக்களுக்கும் 4201 மரணங்கள் பதிவு செய்யப்படுகின்றது.

இவற்றில் ஒவ்வொரு ஒரு இலட்சம் மக்களில் 2880 பேருக்கு ஈரல் அழற்சியும் வீதி விபத்துக்களில் 675 பேரும் புற்றுநோயால் 646 பேரும் மரணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபாவனையால் ஒவ்வொரு வருடமும் 241 பில்லியன் ரூபா பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. (மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்) மத்திய வங்கியின் அறிக்கை (2015) மற்றும் உலகளாவிய சுகாதார கண்காணிப்பு தரவுகளின்படி, நாட்டின் 2015 ஆம் ஆண்டில் மதுசார கலால் வரி மூலம் பெற்றுக்கொண்ட வருமானம் 105,234 மில்லியன் ரூபா ஆகும். அதே ஆண்டின் மது பாவனையால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார நட்டம் 119,660 மில்லியன் ரூபா என உலக சுகாதார ஸ்தாபனம் – இலங்கை, புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சு மூலம் நடத்தப்பட்ட ஆய்விலிருந்து தெரியவந்தது.

நுவரெலியா மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் மதுபானசாலைகளை அமைப்பதற்கான அறிவித்தல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இவற்றில் ஓட்டரி, குயில்வத்த, சென்கிளயார், டயகம ஆகிய பிரதேசங்களில் இதற்கான அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட போதும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக அங்கு மதுபானசாலைகளை அமைக்கும் நடவடிக்கை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் தொடர்ச்சியாக மதுபானசாலைகளை அமைப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதை அறியமுடிகின்றது.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் இந்த நிலை எவ்வாறுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக இலங்கை மதுவரித் திணைக்களத்துக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக மூன்று மதுபானசாலைகளும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக 22 பியர் விற்பனையகங்களை ஆரம்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களத்தின் தகவல் அதிகாரி சி.ஜே.ஏ.வீரகொடி (பிரதி கலால் ஆணையாளர் – சட்டம்) தெரிவித்துள்ளார்.

🛑 நுவரெலியா மாவட்டத்தில் மதுபானசாலைகள்

நாடு முழுவதும் தற்போது அனுமதி பெற்ற 5395 மதுபானசாலைகள், பியர் விற்பனையகங்கள் மற்றும் பூட்டிக் விலா என்பனவும் 92 கள்ளு தவறணைகளும் அமைந்துள்ளன. இவற்றில் அதிகமானவை கொழும்பு மாவட்டத்திலும் (961), மூன்றாவதாக மத்திய மாகாணத்திலும் அமைந்துள்ளன. மத்திய மாகாணத்தின் நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்களில் 806 அனுமதி பெற்ற மதுபானசாலைகள், பியர் விற்பனையகங்கள் மற்றும் பூட்டிக் விலா என்பன அமைந்துள்ளன.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் 232 அனுமதி பெற்ற மதுபான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2 – மொத்த விற்பனை உரிமம், 114 – சில்லறை விற்பனை உரிமம், 38 – ஏ, பி, சி தரம் கொண்ட ஹோட்டல் உரிமம், 1 – களியாட்ட பார் உரிமம், 26 – ரெஸ்டூரண்ட் உரிமம், 4 – வாடி வீடு உரிமம், 4 – கிளப் உரிமம், 16 – பியர், வைன் விற்பனை உரிமம், 5 – வைன் விற்பனையக வளாகத்தில் அருந்தும் உரிமம், 22 – பியர் விற்பனை உரிமம் என்பவற்றுடன் 7 கள்ளு தவறணைகளும் அமைந்துள்ளன.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு புதிதாக ஹோட்டலுக்கான (எப்.எல்.7) உரிமமொன்றும் ஏ, பி, சி தரம் கொண்ட ஹோட்டல் (எப்.எல்.7/8) உரிமங்கள் இரண்டும் சுற்றுலா சபையின் அனுமதிகளுக்கு அமைவாக 22 பியர், வைன் விற்பனையகங்களுக்கான உரிமமும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில்லறை விற்பனை செய்யும் மதுபானசாலைகளுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. எனினும் சென்கிளயார் மற்றும் குயில்வத்த பகுதிகளில் (எப்.எல்.4) சில்லறை விற்பனைகான மதுபானசாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓட்டரி பிரதேசத்தில் (எப்.எல்.7/8) ஏ, பி, சி தரம் கொண்ட ஹோட்டல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நோர்வூட் பிரதேச செயலகத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இதேவேளை ஏற்கனவே மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள 806 அனுமதி பெற்ற மதுபானசாலைகளில் 3 – மொத்த விற்பனை உரிமம், 227 – சில்லறை விற்பனை உரிமம், 153 – ஹோட்டல் உரிமம், 153 – ஹோட்டல் பார் உரிமம், 2 – களியாட்ட பார் உரிமம், 69 – ரெஸ்டூரண்ட் உரிமம், 10 – வாடி வீடு உரிமம், 11 – கிளப் உரிமம், 40 – பியர், வைன் சில்லறை விற்பனை உரிமம், 32 – பியர், வைன் விற்பனையக வளாகத்தில் அருந்தும் உரிமம், 20 – பூட்டிக் விலா, 86 – பியர் விற்பனையகங்கள் என்பன உள்ளடங்கும்

நாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதாக கூறி பெருந்தோட்டங்களை இலக்குவைத்து இவ்வாறான மதுபானசாலைகள் அமைக்கப்படுவது எதற்காக என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகர்புறங்களில் 300 மீற்றர் தூரத்துக்கு ஒரு மதுபானசாலை அமைந்துள்ளது. இது சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவில்லை. மாறாக பெருந்தோட்ட மக்களின் உழைப்பை சுரண்டும் வகையிலேயே அமைந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மிகச்சிறிய நகரங்களான மஸ்கெலியா நகரில் மாத்திரம் 7 மதுபானசாலைகளும் அப்கட் நகரில் மூன்று மதுபானசாலைகளும் டிக்கோயா நகரில் 4 மதுபானசாலைகளும் அமைந்துள்ளன.

நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு வரை 4811 மதுபான விற்பனை உரிமங்களே வழங்கப்பட்டிருந்தன. 2022 ஆம் ஆண்டு இவ் எண்ணிக்கை 5395 ஆக அதிகரித்தது. இதன்மூலம் மூன்று ஆண்டுகளில் 584 புதிய மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2023 செப்டெம்பர் மாதம் வரை மேலும் 156 மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் கண்டி மாவட்டத்தில் 9 உரிமங்களும் பதுளை மாவட்டத்துக்கு 6 உரிமங்களும் மாத்தளை மாவட்டத்தில் இரண்டு உரிமங்களும் கேகாலை மாவட்டத்தில் 5 உரிமங்களும் இரத்தினபுரி மாவட்டத்துக்கு 3 உரிமங்களும் புதிதாக வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக நாடுமுழுவதும் 92 கள்ளு தவறணைகளுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் நுவரெலியா மாவட்டத்தில் ஏழும், கண்டி மாவட்டத்தில் இரண்டும், பதுளை மாவட்டத்தில் இரண்டும் அமைந்துள்ளன.

🛑 நுவரெலியா மாவட்டத்தில் மதுபான நுகர்வு

நுவரெலியா மாவட்டத்தில் சாராயம், பியர் மற்றும் கள்ளு என்பனவே அதிகமாக நுகரப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 2,121,463.47 லீற்றர் பியர் (இது 33 ஆயிரம் லீற்றர் கொள்ளளவை கொண்ட சுமார் 64 பௌசர்களின் கொள்ளளவுக்கு சமமாகும்.) விற்பனையாகியுள்ளது. இதில் நுவரெலியா பிராந்தியத்தில் 1,228,405.26 லீற்றரும் ஹட்டன் பிராந்தியத்தில் 893,058.21 லீற்றரும் விற்பனையாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 1,284,087.35 லீற்றர் சாரயம் (இது 33 ஆயிரம் லீற்றர் கொள்ளளவை கொண்ட சுமார் 42 பௌசர்களின் கொள்ளளவுக்கு சமமாகும்.) விற்பனையாகியுள்ளது. இதில் நுவரெலியா பிராந்தியத்தில் 770,268.51 லீற்றரும் ஹட்டன் பிராந்தியத்தில் 513,818.84 லீற்றரும் விற்பனையாகியுள்ளது.
இதே காலப்பகுதியில் 923491.89 லீற்றர் போத்தல் கள்ளும் (இது 33 ஆயிரம் லீற்றர் கொள்ளளவை கொண்ட சுமார் 28 பௌசர்களின் கொள்ளளவுக்கு சமமாகும்.) விற்பனையாகியுள்ளது. இதில் நுவரெலியா பிராந்தியத்தில் 529,972.5 லீற்றரும் ஹட்டன் பிராந்தியத்தில் 393,519.39 லீற்றரும் விற்பனையாகியுள்ளது. அத்துடன் 189,857 லீற்றர் கள்ளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இக்காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 8162.41 லீற்றர் வைன், 6363.37 லீற்றர் விஸ்கி, 10,773.31 லீற்றர் பிரண்டி, 9954.11 லீற்றர் ஜின், 6213.73 லீற்றர் ரம், 9634.46 லீற்றர் வொட்கா, 6856.30 லீற்றர் வேறு மதுபானங்களும் விற்பனையாகியுள்ளன.

🛑 சட்டவிரோத மதுபான விற்பனை

நுவரெலியா மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பில் 2019 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 15 முறைப்பாடுகள் மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் 6324 சுற்றிவளைப்புகளை கலால் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது அடையாளம் காணப்பட்ட சட்டவிரோத மது விற்பனைக்காக 13,017,000 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அனுமதிபெற்ற மதுபான விற்பனையகங்களை விடவும் சட்டவிரோதமாக மதுபானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகம் என்பது பலருக்கும் தெரியும். இவ்வாறு விற்பனை செய்யும் இடங்கள் தொடர்பில் பிரதேசவாசிகள் அறிந்திருந்தாலும் அவை தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளையும் பதிவு செய்வதில்லை. நகர்புறங்களுக்கு சென்று மதுபானத்தை கொள்வனவு செய்வதை விடவும் இவ்வாறு சட்டவிரோதமாக விற்பனை செய்யும் இடங்களில் இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியுமென்பதால் பலரும் இதை தடுப்பதில்லை.

🛑 அரசாங்கத்தின் இலக்கு என்ன?

அரசாங்கத்தால் கலால் வரி அதிகரிக்கப்பட்டமையின் காரணமாக சகல விதமான மதுபானங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டது. இதனால் மதுபான நுகர்வில் சரிவு ஏற்பட்டதுடன் அரசாங்கத்தின் வருமானமும் குறையத் தொடங்கியது. மது விற்பனையில் வேகமான சரிவு ஏற்பட்டுள்ளதால், 13 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கலால் வரியை குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தன.
இதன்போது கலால் வரியை 2000 ரூபாவால் குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது. தற்போது மது, பியர் ஆகியவற்றுக்கு 4500 முதல் 5500 ரூபாய் வரை கலால் வரி விதிக்கப்படுகிறது.

இதனால் மது விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் சில மது உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக மது விற்பனை பாரியளவில் குறைந்துள்ளதாக நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனால் மது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தொடர்ச்சியாக மதுபானசாலைகளுக்கான உரிமங்கள் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் அதிகரித்துள்ளது. மக்கள் போராட்டங்களை முன்னெடுக்காமல் கோரிக்கை விடுக்காமல் அரசாங்கம் தாமாகவே முன்வந்து வழங்கும் பாரிய சேவை மதுபானசாலைகள் அமைப்பதற்கான உரிமம் வழங்குவதாகும் என அரசாங்கம் இதன்மூலம் பொதுமக்களுக்கு செய்தி வழங்குகின்றதா தெரியவில்லை.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், மக்களின் வருமானம் குறைந்துள்ளமை, மதுபாவனையால் அரசாங்கத்துக்கு ஏற்படும் சுகாதார செலவுகள், குடும்ப வன்முறைகள், சமூக சீரழிவுகள் என்பவற்றை கருத்தில்கொண்டு மதுபாவனையின் அளவை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இதற்கு மாறாக செயற்படுகின்றது.

🛑 மக்களின் நிலைப்பாடு என்ன?

மதுபானம் சம்பந்தப்பட்டதான பாதகமான விளைவுகளாக இனங்காணப்பட்ட குடும்ப மோதல்களுக்காகவும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்காகவும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபை, உலக சுகாதார அமைப்பு (இலங்கை அலுவலகம்), இலங்கை மருத்துவ சங்கத்தின் ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை மூலம் அரசாங்கம் வருமானத்தை எதிர்பார்ப்பதே புதிய மதுபானசாலைகளுக்கான உரிமங்கள் வழங்க காரணம். நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பெரும்பாலான மதுபானசாலைகள் மறைமுகமாக அரசியல்வாதிகளுக்கு சொந்தமாகையால் இவ்விடயம் குறித்து அவர்கள் குரல் எழுப்புவதில்லை. மக்கள் மதுவிலிருந்து விலகுவதற்கு முயற்சித்தாலும் அதனை தொடருவதற்கு அரசாங்கம் வழிவகுக்கின்றது.

இன்று மதுவை ஒழிப்பதற்கு இளைஞர்கள் ஒன்றுகூடியுள்ளமை மகிழச்சியானாலும் அதை தொடர வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் புதிய மதுபானசாலைகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் எதிரொலியாக பிரதேச மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்து அவற்றை தடுத்து நிறுத்தியுள்ளனர். எனினும் அரசாங்கம் வழங்கிய உரிமத்தை இன்னும் மீளப்பெற்றுக்கொள்ளவில்லை. எனவே மாற்று இடங்களையோ அல்லது வலிந்து திணிப்பதற்கோ அரசாங்கம் முயற்சிக்கலாம். இதனால் பிரதேச மக்கள் எப்போதும் அவதானமாகவும் அவற்றை முறியடிப்பதற்கும் செயற்பட வேண்டும்.

கட்டுரையாளர் – க.பிரசன்னா
நன்றி தினக்குரல்

Related Articles

Latest Articles