பங்களாதேஷின் நிலைக்கு இலங்கை செல்வதை நான் தலையிட்டு தடுத்தேன்

நாட்டின் அரச அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட இடமளிப்பது பாரிய துயரத்துக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரச அதிகாரம் ஒரு தரப்பிடமிருந்து மற்றுதொரு தரப்பினருக்கு சுமூகமாக மாற்றப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று பங்களாதேஷுக்குள் அவ்வாறான நிலையே ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நிலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பங்களாதேஷ் தவறியிருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2022 ஆம் ஆண்டு இலங்கையிலும் நாட்டில் அவ்வாறானதொரு நிலை ஏற்படவிருந்ததாகவும் அதனை தானே தலையிட்டு தடுத்திருந்தாகவும் சுட்டிக்காட்டினார்.

‘ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக வைத்தியர்கள்’ என்ற தொனிப்பொருளில் நேற்று (12) பிற்பகல் பத்தரமுல்லை வொர்டஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற வைத்தியர்களிள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க கடந்த இரண்டு வருடங்களில் அடைந்த பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிலைமைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இதன்போது வைத்தியர்கள் தங்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் நேரடியாக எடுத்துரைத்ததுடன் ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார்.

இதன்போது கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இந்நாட்டின் வைத்தியர்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் வேளையில், ​​ஒவ்வொருவருக்கும் உரிய பங்கு வழங்கப்படும் என்பதோடு, வைத்தியர்களின் எதிர்பார்ப்புக்களையும் சம்பளத்தையும் சிறந்த வகையில் பெற்றுக்கொடுப்பதே தனது இலக்காகும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரமும், அரசியல் கட்டமைப்பும் சரிவடைந்துள்ளதால், அனைத்தையும் மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும், ‘இயலும் ஸ்ரீலங்கா’ வேலைத் திட்டத்தினால் புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு வைத்தியர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி 100 வருடங்கள் பழமையான மருத்துவக் கட்டளைச் சட்டத்தை புதுப்பிப்பதற்கான சுகாதார அமைச்சின் ஆலோசனைச் செயன்முறைகள் மீள ஸ்தாபிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

புதிய சுகாதாரத் தரநிலைகளை உருவாக்கி, அரச மற்றும் தனியார் சுகாதாரத் துறைகளை உள்ளடக்கிய விரிவான சுகாதார சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரம் மீண்டு வந்ததன் பின்னர் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு காரணமாக, தமது தொழில் அந்தஸ்து நீதித்துறை நிகரானதாக மாறியிருப்பதாக வைத்தியர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். அதுகுறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி உடனடிச் சீர்த்திருத்தங்களை செய்வதா அல்லது படிப்படியாக திருத்தங்களை செய்வதா என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

“யாரும் ஏற்றுக்கொள்ள முன்வராத நாட்டை ஏற்றுக்கொண்டு சுமூகமான நிலைமைக்கு கொண்டு வர என்னால் முடிந்தது. அரச அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. அதிகாரம் ஒரு தரப்பிடமிருந்து மற்றுமொரு தரப்பினருக்கு சுமூகமாக மாற்றப்பட வேண்டும். நாடொன்றின் அரச அதிகாரம் வெற்றிடமாவது பாரிய துயரங்களுக்கு வழி வகுப்பதாக அமையும்.

பங்களாதேஷில் இன்று அதுவே நடந்திருக்கிறது. அரச அதிகாரத்தில் இடைவௌி ஏற்படுவதற்கு இடமளித்ததால், அந்த இடைவௌியை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. ஒவ்வொருவரும் தன்னிச்சையான விருப்பங்களுக்கு அமைவாக அந்த வெற்றிடத்தைப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கின்றனர்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய பின்னர் இலங்கையில் இதேபோன்ற பிரச்சினையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு முழுமையான வெற்றிடம் இருந்தது. அப்போது அதை நிரப்பி தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தேன்.

ஆரம்பத்தில், சபாநாயகர் தலைமையிலான குழுவொன்றை அமைத்து ஆட்சியை நடத்த வேண்டும் என்றே தீர்மானித்தோம். பின்னர் அது சாத்தியமற்றதாக தெரிந்தது.

பிரதமராக இருந்த நான், அப்போதைய ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் அந்த பதவியை ஏற்றுக்கொண்டு ​​பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். இனிவரும் காலங்களில் ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும். அதிக வருமானம் ஈட்ட வேண்டும். அதற்காக மொத்த தேசிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதனால் உங்களுக்கான சம்பளமும் அதிகரிக்கும்.

இந்த இலக்கை அடைய, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். நமது நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வரும் நோயாளிகளுக்கும் சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் அதிகப்படியான வருமானத்தை ஈட்டுவதை இலக்கு வைத்து முழு சுகாதார சேவையும் செயற்பட வேண்டும்.

இந்த அணுகுமுறை சுகாதார சேவையின் சிக்கல்களைத் தீர்க்கவும், காலப்போக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 7 – 8% பங்களிப்பை வழங்கவும் முடியும்.

கிராமப்புற வறுமையை ஒழிக்கும் நோக்கில் நாட்டின் விவசாயத்தை நவீனமயமாக்க திட்டமிட்டிருகிறோம். விளைச்சலை அதிகப்படுத்தும் வகையிலான புதிய விவசாய முறைமைகளை அறிமுகப்படுத்த தீர்மானித்திருக்கிறோம்.

அதற்கு 300,000 ஏக்கர் நிலப்பரப்பைப் பயன்படுத்த எதிர்பார்க்கிறோம். இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த வேண்டும். ஒரு சுற்றுலாப் பயணியின் நாளாந்த செலவை 150 – 400 டொலர்களாக அதிகரிக்கும் வகையில் சேவைகளை வழங்கி, ஊக்கமளிக்க வேண்டும்.

புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குதல், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறுதல் மற்றும் நிலையான வலுசக்தி பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தியிருக்கிறோம். அதனால் இலங்கையின் பொருளாதாரத்தில் குறுகிய காலத்தில் துரிதமான மேம்பாட்டை காண முடியும்.

‘ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இதில் டிஜிட்டல் மயமாக்கல், அறிவுவை மையமாகக் கொண்ட பொருளாதாரம், விவசாயத்தை நவீனமயப்படுத்தல் ஆகியவற்றை முன்னெடுத்தால் நாடு பெரும் மாற்றத்தை சந்திக்கும். நாம் ரூபாவை நிலைப்படுத்தியுள்ளோம். பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வருமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் ‘உறுமய’ வேலைத்திட்டம், ‘அஸ்செசும’ திட்டம் என்பனவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பெருந்தோட்ட லயன் அறைகளில் வசிக்கும் மக்களுக்கு காணி உரிமையை வழங்கி அந்தப் பகுதிகளை கிராமங்களாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பெண்களை வலுவூட்டும் சட்டம் மற்றும் சமூக நீதி தொடர்பான ஆணைக்குழு மூலம் இந்த நாட்டில் பெண்களை வலுவூட்ட நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாங்கள் தயாரித்துள்ள புதிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை முழுமையாக நடைமுறைப்படுத்த இன்னும் ஒரு வருடம் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.

பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். இதற்கு முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பின் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட 87 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

நமது நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பும் அரசியல் கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே இதையெல்லாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். ‘இயலும் ஸ்ரீலங்கா’ நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் அனைத்துத் துறைகளையும் ஒன்றிணைத்து புதிய இலங்கையை உருவாக்குவதே எனது நோக்கமாகும்.

இந்த முயற்சி நம்மை மட்டும் சார்ந்து இல்லை. இதில் இந்த நாட்டின் இளம் தலைமுறையினருக்கு முக்கிய பங்கு உள்ளது.

நாடு முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் ஒரு வருடம் அல்லது அதை விட அதிக காலம் தேவைப்படும். கடினமான சூழ்நிலையிலும் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையில் நீங்கள் வழங்கும் அத்தியாவசிய சேவையை நாங்கள் பாராட்டுகிறோம்.

கடந்த இரண்டு வருடங்களில் நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் உங்களின் பங்களிப்புக்கு நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் அரசாங்கத்துடன் உடன்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன. நீங்கள் உடன்படாத சந்தர்ப்பங்களும் உள்ளன.

ஆனால் நீங்கள் இந்த நாட்டிற்கு ஒரு முக்கியமான சேவை செய்கிறீர்கள். நாங்கள் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும்போது உங்களுக்கு சிறந்த வாய்ப்புகளையும் சம்பளத்தையும் வழங்குவதே எனது குறிக்கோள். இதன்போது அனைவருக்கும் உரிய பங்கு கிடைக்க வேண்டும்.” என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles