சீரற்ற காலநிலை நிலவும் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், வடிகான் கட்டமைப்பை முறையாக அமைக்குமாறு வலியுறுத்தியும் ப/ பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலைக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில் பெற்றோர்கள் பங்கேற்று, தமது தரப்பு கோரிக்கை உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
கடும் மழை காரணமாக தமிழ் மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடம் அமைந்துள்ள பகுதிகளில் மழை நீருடன் கற்கள் , குப்பைகள், கழிவுகள் அனைத்தும் தேங்கி கிடக்கின்றன. அத்துடன், சில வகுப்பறைகளினுள் தண்ணீர் புகுந்ததால் கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தரம் 3,4,5 வகுப்புகளில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பசறை – லுணுகலை வீதி புனரமைக்கப்பட்டபோது பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கு அருகாமையில் சரியான முறையில் வடிகான்கள் அமைக்கப்படவில்லை எனவும் இதனாலேயே தண்ணீர் உட்புகுவதாகவும் இதுசம்பந்தமாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் சுட்டிக்காட்டினார்.
எனவே இது சம்பந்தமாக அதிகாரிகள் கவனம் செலுத்தி உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
ராமு தனராஜ்