தேயிலை தொழிற்சாலைகளை நடாத்தி செல்ல தேவையான பச்சைக் கொழுந்து இன்மையால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தொழிற்சாலை முகாமையாளர் தெரிவித்தனர்.
தேயிலை உற்பத்திக்காக பயன்படுத்தும் இரசாயன உரம் மற்றும் இரசாயன மருந்துகள் இன்மையால் தேயிலைத் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பச்சைக் கொழுந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தேயிலை உற்பத்தி செய்யவும், தேயிலை தொழிற்சாலைகளை நடாத்திச்செல்லவும் தொழிற்சாலைகளுக்கு நாளாந்தம் தேவைப்படும் பச்சைக் கொழுந்தனின் அளவு இத்தினங்களில் நூற்றுக்கு 30% வீதம் மாத்திரமே கிடைப்பதாக தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தேயிலை தொழிற்சாலையினை நடாத்திச் செல்ல நாளாந்தம் தேவைப்படும் பச்சைக் கொழுந்தின் அளவு நூற்றுக்கு 70% வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தொழிற்சாலைகளை நடாத்திச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தேயிலை உற்பத்திற்கு போதுமான அளவு பச்சைக் கொழுந்து கிடைக்காமையினால் பலாங்கொடை பிரதேசத்திலுள்ள தேயிலைத்தொழிற்சாலைகள் பலவற்றில் தேயிலை உற்பத்திகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். வலேபொட- இராசகலை- ஹெரமிடிகல- சீதகல- வேவல்வத்த- சமணலவத்த- பின்னவல- எல்லேபொல- மஸ்ஸன்ன- ஊவெல்ல- குருபெவில ஆகிய பகுதிகளிலிருந்து கிடைக்கும் பச்சைக் கொழுந்தினைக் கொண்டு இப்பிரதேசத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டால் அங்கு பணி புரியும் அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுமென முகாமையாளர் தெரிவித்தார்.
