கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டி இன்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதில் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 153 ஓட்டங்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ராகுலும், மயங்க் அகர்வாலும் சீரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கெயிலின் அதிரடி சிஎஸ்கேவிடம் எடுபடவில்லை. வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார்.
பின்னர் வந்த பூரான், மந்தீப் ஆகியோ சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அகல பாதாளத்தில் இருந்தது பஞ்சாப் அணி. ஆனால் அதையடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 62 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூபிளசிஸும் கெயிக்வார்டும் களம் இறங்கினர். அதில் டூபிளசிஸ் தனக்கே உரிய பாணியில் அதிரடியாக விளையாடி ஆரம்பம் முதலே ரன்களை சீராக குவித்து வந்தார். அதற்கு இளம் வீரர் கெயிக்வார்ட்டும் துணையாக நின்றார். ஆனால் ஒருகட்டத்தில் 48 ரன்களில் டூபிளசிஸ் அவுட்டாக கெயிக்வார்டுடன் ராயுடு கைக்கோர்த்தார்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.5 பந்துகளில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்தனர். கெயிக்வார்ட் 62 ரன்களுடனும், ராயுடு 30 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றனர். இந்தத் தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் கனவு சிதைந்துவிட்டது. சென்னை அணி கடைசி இடத்தில் இருந்து எஸ்கேப் ஆவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.