பதுளை பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரு மாணவர்கள் உள்ளிட்டு மூவர் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதுடன், 261 பேர் ‘டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனரென்று, பதுளை பொது சுகாதார சேவை பணிப்பகம்; தெரிவித்துள்ளது.
பதுளையில் ‘டெங்கு’ தடுப்பு வேலைத்திட்டத்தினை பதுளை மாநகர சபையினர், பிரதேச செயலகத்தினர், பொலிஸ் நிலையத்தினர், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விரு தினங்களில் பதுளையில் 450 கட்டிடத் தொகுதிகள் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் அரச உத்தியோகத்தர்களின் அரச வீடுகள், அரச நிறுவனங்கள் உள்ளிட்டு 25 இடங்கள், ‘டெங்கு’ நுளம்புகள் பரவக்கூடிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட 25 இடங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட 261 பேருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.