பதுளை நகரிலுள்ள 15 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

பதுளை மாநகரின் வர்த்தக நிலையங்களில் 15 வர்த்தகர்களுக்கெதிராக, பதுளை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கூட்டாக, பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் (இன்று) 06-04-2021ல் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

பதுளை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பத்துப்பேர் கொண்ட குழுவினர், பதுளை மாநகரின் 160 வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்டு, சோதனைகளை மேற்கொண்டனர். இதற்கமைய 15 வர்த்தக நிலையங்களில், 15 வர்த்தகர்களுக்கெதிராக, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, அவர்களுக்கெதிராக, வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அத்துடன், மேலும் பெரும்பாலான வர்த்தகர்களுக்கு, பொது சுகாதாரப் பரிசோதகர்களினால், கடுமையான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.

வழக்குகள் தொடரப்பட்ட 15 வர்த்தகர்களுக்கெதிராக, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமை, அசுத்தமான உணவுவகைகளை சுத்தப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை, மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் வைத்திருந்தமை, காலம் கடந்த நிலையிலான பொருட்கள் இருந்தமை, எடை குறைக்கப்பட்ட நிலையிலான பொதி செய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடித்தமை, பொருட்களை பதுக்கி வைத்திருந்தமை, கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

06-04-2021ல் பதுளை மாநகரில் முற்றுகையிடப்பட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் உணவகங்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள், மலிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் ஆகியனவாகும்.

பொதுமக்களின் நலன் கருதியும், அவர்களினால் செய்யப்பட்ட புகார்களினடிப்படையிலுமே, மேற்படி முற்றுகை இடப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகும்.

எம். செல்வராஜா, பதுளை

Paid Ad