பந்தைப் பளபளப்பூட்ட எச்சிலை பயன்படுத்த நிரந்தரத் தடை

கிரிக்கெட் பந்தை பளபளப்பூட்ட எச்சிலை பயன்படுத்த விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் நேற்று (20) நிரந்தர தடையாக அறிவித்துள்ளது.

ஐ.சி.சி நிர்வாகக் குழு கூட்டம் ஒன்றில் ஒப்புதல் அளிக்கப்பட்டபடி, வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி தொடக்கம் துடுப்பெடுத்தாடாத மறு முனையில் இருக்கும் துடுப்பாட்ட வீரரை ரன் அவுட் செய்வது தொடர்ந்து, ‘நியாயமற்ற ஆட்டம்’ என வகைப்படுத்தப்பட மாட்டாது.

அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டி இந்த புதிய விதிகளின் கீழ் நடைபெறும் பிரதான போட்டியாக அமையவுள்ளது.

பந்தை சுவிங் செய்வதற்கு உதவும் வகையில் ஒரு பக்கத்தை பளபளப்பூட்ட எச்சிலை பயன்படுத்துவது கொரோனா பரவலை தடுப்பதற்காக 2020 மே மாதத்தில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. அந்தத் தடை நிலைத்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“கொவிட் தொடர்பான தற்காலிக நடவடிக்கையாக சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எச்சிலை பயன்படுத்துவதற்கு தடை இருந்து வந்ததோடு அந்தத் தடையை நிரந்தரமாக்குவது சரியானது” என ஐ.சி.சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று மறுமுனையில் இருக்கும் துடுப்பாட்ட வீரர் பந்து வீசும்போது கோட்டுக்கு வெளியே சென்றால் ரன் அவுட் செய்யும் சர்ச்சைக்குரிய வழக்கத்தை “நியாயமற்ற ஆட்டம்” என்ற வகைப்படுத்தலில் இருந்து ‘ரன் அவுட்’ என்ற பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஆட்டமிழப்பு முறை ‘மன்கட்’ என்று அழைக்கப்படுகிறது. 1948 சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் பில் பிரெளனை இந்திய பந்துவீச்சாளர் மன்கட் இந்த சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழக்கச் செய்ததாலேயே இந்தப் பெயர் வந்தது.

இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க விதி மாற்றமாக புதிய துடுப்பாட்ட வீரராக வரும் ஒருவர் துடுப்பாடும் முனையில் அடுத்த பந்துக்கு முகம் கொடுக்க வேண்டும்.

“முன்னர் பந்து பிடியெடுக்கப்படுவதற்கு முன்னர் துடுப்பாட்ட வீரர்கள் மாறிக்கொண்டால் புதிதாக வரும் துடுப்பாட்ட வீரர் துடுப்பெடுத்தாடாத முனையில் இருப்பதாக அமைந்தது” என்று ஐ.சி.சி குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று புதிதாக துடுப்பெடுத்தாட வரும் துடுப்பாட்ட வீரர்கள் ஆடுகளத்திற்கு வரும் காலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மூன்று நிமிடங்களாகக் குறைக்கப்பட்டிருப்பதோடு டி20 சர்வதேச போட்டிகளில் அது 90 விநாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு புதிய விதியின்படி பந்துவீச்சாளர் பந்து வீச ஓடிக்கொண்டிருக்கும்போது களத்தடுப்பில் ஈடுபடும் வீரர்கள் எந்த ஒரு நியாயமற்ற மற்றும் திட்டமிட்ட நகர்வுகளை மேற்கொண்டால் துடுப்பெடுத்தாடும் அணிக்கு ஐந்து தண்டனை ஓட்டங்களை வழங்க முடியும்.

அதேபோன்று அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளிலும் கலப்பு ஆடுகளங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles