பது/ லுணுகலை ஸ்ரீ இராமகிருஸ்ணா (1AB) தமிழ் மகா வித்தியாலயத்துக்கு
புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் தொடர்பிலான எதிர்ப்பு மற்றும் சர்ச்சை
நிலை, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரின் நேரடி
தலையீட்டை யடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி புதிய
அதிபரின் நியமனம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் அதிபர் தரம் ஒன்று
தகைமை கொண்ட ஒருவர் நியமிக்கப்படும் வரையில் பிரதி அதிபராக பணியாற்றியவர் பதில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பது/ லுணுகலை ஸ்ரீ இராமகிருஸ்ணா (தரம் 1AB) தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் அவரது நியமனத்தில் பாடசாலைச் சமூகத்தினர் திருப்தி கொள்ளவில்லை. இந்நிலையில் அவர் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய
மாணவ சங்க உறுப்பினர்கள், சமூக நலன் விரும்பிகள் என பல்வேறு தரப்பினரும் கடந்த சில தினங்களாக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.இதனால் அங்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் தேக்க நிலை காணப்பட்டது.
இது தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட தையடுத்து நேற்று முன்தினம் (10) செவ்வாய்க்கிழமை ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசாமிலை சந்தித்து நிலமையை
விளக்கியதோடு விளக்கக் கடிதமொன்றையும் கையளித்தார்.
லுணுகலை ஸ்ரீ இராமகிருஸ்ணா தமிழ் மகா வித்தியாலயத்தின் நிலைமை மற்றும் அதன் நியாயத்தன்மையைப் புரிந்து கொண்ட ஆளுநர் புதிய அதிபரின் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்தார்.
அத்தோடு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தோப்பியஸ்சிடம் பாடசாலையின் பிரதி அதிபரை பதில் அதிபராக கடமையாற்றும்படியும் வர்த்தமானி ஊடாக விளம்பரம் செய்யுமாறும் அதிபர் தரம் ஒன்று தகைமை கொண்டவரை நியமிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
இதன் பின்னர் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார்
பாடசாலையின் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு மாகாண கல்விச் செயலாளரை
சந்தித்து மேற்படி உத்தரவாதத்தையும் பெற்றுக்கொடுத்தார். இதன்படி மேற்படி பாடசாலை சார்ந்து நிலவிய அசாதாரண சூழ்நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
