” பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை இந்த அரசாங்கம் வெகு விரைவில் சந்திக்கும். இந்த நாட்டில் வாழும் விவசாயிகள், அதிபர் ஆசிரியர்கள், வியாபாரிகள், வைத்திய உதவியாளர்கள், தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை எதிர்த்து நாடலாவிய ரீதியில் தனித்தனியாக தினம்தோரும் போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டம் ஒன்றை வெகு விரைவில் நடத்துவார்கள்.
எனவே அரசாங்கம் மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக சம்பந் தப்பட்ட தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணாவிட்டால் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இன்று இந்த நாட்டில் விவசாயிகள், அதிபர் ஆசிரியர்கள் , பொது மக்கள் தனித்தனியாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நாடலாவிய ரீதீயில் நடத்திவருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
இன்று விவசாகள் உரம் கேட்டு போராட்டம் நடத்துகின்றனர். அதிபர், ஆசிரியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்துகின்றனர். பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து பொது மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கேட்டு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இன்று இந்த அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. விவசாயத்திற்கான உரம் கிருமிநாசினிகளுக்கு தட்டுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பெற்றோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலைகளை உயர்த்தியுள்ளது.அத்தோடு அத்தியாவசிய உணவு மற்றும் அரிசி, கோதுமை மா, பால் மாவின் விலைகளையும் அதிகரித்துள்ள தால் பொது மக்களின் வாழ்க்கை செலவு புள்ளி அதிகரித்து வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாமல் மக்கள் அவஸ்த்தைப்படுகின்றார்கள். இவ்வாரான நடவடிக்கையால் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.
இந்த அரசாங்கம் பொது மக்களின் வாழ்வாதாரத்தை உணர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதிபர் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்தோடு இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக உழைக்கும் பெருந்தோட்ட மக்களின் சமூக பொருளாதார பிரச்சனையையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.
