வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக 7 குழுக்களை அமைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை லீலாவதி வைத்தியசாலையில் சைஃப் அலிகான் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட சைஃப் அலி கான் தரப்பினர், “சைஃப் அலி கான் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார். அவர் தற்போது குணமடைந்து வருகிறார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பாதுகாப்பாக உள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.” எனக் கூறப்பட்டுள்ளது.
சைஃப் அலி கானின் பாந்த்ரா வீட்டில் உள்ள அனைத்து வீட்டுப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களிடமும் பொலிஸார் விசாரித்துள்ளனர். இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர் அங்கு பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் ஒருவருக்கு நன்கு தெரிந்தவராக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.