பிரதமர் மஹிந்தவின் இத்தாலி பயணத்தின் நோக்கம் என்ன?

 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மற்றும் விசாரணைகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் வத்திக்கான் உயர்பீடத்துக்கு இலங்கை அரசு தெளிவுபடுத்தவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இத்தாலி பயணத்தின்போதே இந்த தெளிவுபடுத்தல் வழங்கப்படவுள்ளது.

21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை எனவும், எனவே, முறையான விசாரணை மூலம் நீதி கிடைக்காவிட்டால் சர்வதேசத்தை நாடவேண்டிவரும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன், வத்திகானிலுள்ள பாப்பரசருக்கும் இது தொடர்பில் கடிதம் அனுப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே வத்திக்கான் உயர்பீடத்துக்கு விசாரணை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இத்தாலி பயணத்தின்போது 21/4 தாக்குதல் சம்பவத்தின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் தெளிவுபடுத்தல் வழங்கப்படவுள்ளது என்பதை அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண நேற்று உறுதிப்படுத்தினார்.

இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்று, ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இத்தாலி செல்லவுள்ளனர்.

இவ்விஜயத்தின்போது இத்தாலி பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆகியோரை சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஏனைய சில இராஜதந்திர சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன.

Related Articles

Latest Articles