பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில், நடிகர் சத்யராஜ் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜ், ‘பாகுபலி’ படத்தின் ‘கட்டப்பா’ கதாபாத்திரம் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தார்.
அண்மையில் அவரது நடிப்பில், ‘சிங்கப்பூர் சலூன்’, ‘அன்னபூரணி’ ஆகிய படங்கள் வெளியாகின. அடுத்ததாக அவரது நடிப்பில் ‘வெப்பன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் படத்தில் சத்யராஜ் பிரதமர் மோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு பெரியார் ஈ.வே.ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட படத்தில் நடித்திருந்தார் சத்யராஜ். அந்தப் படத்துக்கு ‘பெரியார்’ என தலைப்பிடப்பட்டிருந்தது. தற்போது அவர் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.