பிளே ஆப் வாய்ப்பில் சிஎஸ்கே நீடிப்பு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் என்ற நிலைக்குள் கட்டுப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

பேட்டிங்கை மந்தமாக தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்பிளேவில் 42 ரன்கள் மட்டுமே சேர்த்தது.ரன்கள் சேர்க்க தடுமாறிய தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 பந்துகளில், 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 24 ரன்களும், ஜாஸ் பட்லர் 25 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களும் எடுத்த நிலையில் சிமர்ஜீத் சிங் பந்தில் ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஜோடிபெரிய அளவில் ரன் வேட்டைநிகழ்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதானமாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளை சந்தித்த நிலையில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 15 ரன்கள் எடுத்த நிலையில் சிமர்ஜீத் பந்தில் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய துருவ் ஜூரெல் 18 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் துஷார் தேஷ்பாண்டே வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஷுபம் துபே சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். சீராக ரன்கள் சேர்த்த ரியான் பராக் 35 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ரன் சேர்த்தார்.

சிஎஸ்கே தரப்பில் சிமர்ஜீத் சிங் 4 ஓவர்களை வீசி 26 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களை வீசி 30 ரன்களை வழங்கிய நிலையில் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். பவர்பிளேவில் தீக்சனாவும், நடு ஓவர்களில் ரவீந்திர ஜடேஜாவும் வெகுவாக ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். இவர்கள் கூட்டாக 8ஓவர்களை வீசி 52 ரன்களை மட்டுமே வழங்கினர். அதேவேளையில் ஷர்துல் தாக்குர் 4 ஓவர்களை வீசி 32 ரன்களை வழங்கிய நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

142 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சிஎஸ்கே அணியானது 18.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 41 பந்துகளில், ஒரு பவுண்டரி, 2 சிக்ஸருடன் 42 ரன்களும் சமீர் ரிஸ்வி 8 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 15ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில்அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

டேரில் மிட்செல் 13 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் யுவேந்திரசாஹல் பந்தில் எல்பிடபிள்யூஆனார். இவர்களைத் தொடர்ந்துமொயின் அலி10 ரன்களில் நந்த்ரே பர்கர் பந்தில் நடையை கட்டினார். அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 11 பந்துகளில், ஒரு சிக்ஸர் 2 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்தநிலையில் அஸ்வின் பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்று ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா 5 ரன்களில் இருந்த போது பீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. 13 ஆட்டங்களில் விளையாடி உள்ளசிஎஸ்கே 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் 0.528 நிகர ரன் ரேட்டுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் வரும் 18-ம்தேதி விளையாடுகிறது. இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

 

 

Related Articles

Latest Articles